
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அண்டை நாடான அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அதிபர் இப்ராகிம் ரைசி மீண்டும் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர்
அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் முயற்சியில் அந்நாட்டு மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி: கார்கே அதிர் ரஞ்சன் சவுத்ரி இடையே வலுக்கும் மோதல்!
மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்ட நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த 9 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது.” என பதிவிட்டுள்ளார்.