பத்மநாபசாமி கோயிலில் பெண்கள் ஆடை கட்டுப்பாடு தளர்வு - எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்

First Published Nov 30, 2016, 4:50 PM IST
Highlights


கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலுக்கு வரும் பெண்கள் அணிந்து வரும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதை எதிர்த்து இந்து அமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

100 ஆண்டுபழக்கம்

பெண்கள் சல்வார் கம்மீஸ், சுடிதார் அணிந்து கோயிலுக்கு வரும் போது, இடுப்பில் ‘முன்டு’(வேட்டி) கட்ட வேண்டும் என்பது நூற்றாண்டுகால பழக்கமாகும்.

அந்த பழக்கத்தை மாற்றி, கோயில் நிர்வாக அதிகாரி கே.என். சத்தீஸ், முன்டு அணிந்து பெண் வரத்தேவையில்லை என்று நேற்று முன் தினம் தெரிவித்தார். இந்த விவகாரம்தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

வழக்கு

கேரள உயர்நீதிமன்றத்தில் ரியா ராஜி என்பவர், கோயிலுக்கு பெண்கள் சாமிதரிசனம் செய்ய வரும் போது, சுடிதார், சல்வார் அணிந்திருந்தபோதிலும், இடுப்பில் வேட்டி கட்டி வர வற்புறுத்தப்படுகிறார்கள். இது குறித்து கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இது குறித்து கோயில் அதிகாரி உரிய முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி சாஜி பி சாலி உத்தரவிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து கோயில் அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

போராட்டம்

கோயில் நிர்வாக அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக பாரதிய ஜனதா,  கேரள பிரமாணசபா, இந்து ஐக்கிய வேதி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பத்மநாபசாமிகோயிலின் மேற்கு வாயிலில் நேற்று ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

உரியமுடிவு

இது குறித்து கேரள மாநில தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது, “ பத்மநாபசாமி கோயில் நிர்வாக அதிகாரியின் உத்தரவும், அதைத்தொடர்ந்து எழுந்துள்ள போராட்டம் குறித்தும் நான் அறிந்தேன். இந்த விவகாரத்தில் அரசு அனைத்து தரப்புகளையும் ஆய்வு செய்து, உரிய முடிவுகளை எடுக்கும்'' என்று தெரிவித்தார்.

விரோதமானது

போராட்டம் நடத்திய கேரள பிராமணசபாவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ கோயிலில் பெண்கள் இடுப்பில் முன்டு அணிந்து வருவது என்பது நூற்றாண்டுகாலம் பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த வழக்கத்தை ஒரேநாளில் அதிகாரி மாற்றி முடிவு எடுத்துவிட முடியாது. இது கோயிலிலும் பாரம்பரியத்துக்கும், பழக்கத்துக்கும் விரோதமானது'' என்றார்.

இந்த போராட்டத்துக்கு பின், பெண் பக்தர்கள் கோயிலுக்கு சுடிதார், சல்வார் அணிந்தபோது அவர்களை அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

விளக்கம்....

கோயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், “ இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. பெண்கள், சுடிதார், சல்வார் அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும்''என்றார்.

click me!