
குமரியில் இருந்து ஷிப்ட் ஆன புயல்... குஜராத்தை நோக்கி !
கடந்த வாரம் குமரியைக் கடந்த ஓக்ஹி புயல், குமரி மாவட்ட நிலப் பரப்பை பெரிதும் புரட்டிப் போட்டது. புயலை விட அங்கே மையம் கொண்ட அரசியல் புயல் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புயல் குறித்து சென்னை வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், புயல் குமரி மாவட்டத்தினுள் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது. கன்னியாகுமரி மட்டுமல்லாமல், கேரளத்தில் திருவனந்தபுரம் நிலப் பகுதி, தொடர்ந்து அருகில் உள்ள லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழகம் மற்றும் கேரளாவை புரட்டி போட்ட ஓக்ஹி புயல் தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை நெருங்கி வருவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் திங்கள்கிழமை இன்று மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் இன்று இரவு தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும். புயலின் போது பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓக்ஹி புயல் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஓக்ஹி புயலானது அமினி தீவில் இருந்து 390 கி.மீ., மும்பையில் இருந்து 910 கி.மீ., சூரத் நகரில் இருந்து 1120 கி.மீ., தொலைவில் உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அந்தப் புயல் வடகிழக்கு திசை நோக்கி நகரும். இதனால் வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதி மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்... என்று கேட்டுக் கொண்டுள்ளார்.