ஜி.எஸ்.டி.க்கு பின் முதல் பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் பா.ஜனதா அரசு தாக்கல் செய்யும் கடைசி நிதி நிலை அறிக்கையா?

First Published Dec 3, 2017, 5:29 PM IST
Highlights
First post-GST budget likely on February 1


சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தபின் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடர் 2018ம் ஆண்டு, ஜனவரி 30ந்தேதி தொடங்கும் என்றும், அன்றைய தினம், இரு அவைகளையும் ஒன்றாக கூட்டிவைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு அடுத்தநாள் அதாவது ஜனவரி 31-ந்தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 1-ந்தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பல எதிர்பார்ப்புகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும்.  

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த முறை மாற்றப்பட்டு, இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி நிதியாண்டு தொடங்குவதால், அதற்கு ஏற்றார்போல், மாநிலங்களுக்கும், திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய இந்த முறை கொண்டுவரப்பட்டது.

இதேபோல, ரெயில்வே துறை இருந்த தனிபட்ஜெட்முறை நீக்கப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யும் முறை இந்த ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டது.

மேலும், குஜராத் தேர்தல் காரணமாக குளிர்காலக்கூட்டத் தொடர் டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி ஜனவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் முடிந்து ஒரு மாதம் முடிவதற்குள் ஜனவரி 30ந்தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிவிடுகிறது.

இரு கூட்டத் தொடர்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளிகூட இல்லாமல் அடுத்தடுத்து தொடங்குவது இது முதல் முறையாகும்.

இதற்கு முன் கடந்த 1976ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது, குளிர்காலக் கூட்டத்தொடர் ஜனவரி வரை நீடித்தது. ஆனால், அப்போது பட்ஜெட் தாக்கல் என்பது பிப்ரவரி கடைசிநாளில் இருந்ததால், ஒரு மாதம் இடைவெளி இருந்தது. இந்த முறை அந்த இடைவெளி இல்லை.

குறிப்பாக, மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் 2018-19 நிதியாண்டு பட்ஜெட்டாகும். ஏனென்றால், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என்பதால், அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யக்கூடும் என்பதால், மோடி அரசுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாகும்.

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஏனென்றால்,கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி.வரி நடைமுறைப்படுத்தப்பட்டுது. அதற்கு முன்வரை, சுங்கவரி, உற்பத்திவரி, சேவை வரி என தனித்தனியாக வாங்கப்பட்டு, ஜூலை மாதத்தில் இருந்து அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் தீர்மானிக்கப்படுவது என்பதால், அடுத்த நிதியாண்டு பட்ஜெட்டில், புதியவரி அல்லது சேவைவரி, உற்பத்தி வரி உயர்த்துவது என்பது இருக்காது.

நேரடி வரிகளாக வருமானவரிச் சலுகை, கார்பரேட் வரி ஆகியவை குறித்த மாற்றங்கள் இருக்கலாம். அதேசமயம் புதிய திட்டங்களை அரசு அறிவிக்கலாம். 

click me!