
நாடுமுழுவதும் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் சாலைக்கட்டமைப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை கருத்துக்கொண்டு ,மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை விரைவில் முடிவு அறிவிக்க இருக்கிறது.
இது குறித்து சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் தற்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல கட்டப்பாடு இருக்கிறது. இது மணிக்கு 100.கி.மீ வேகம் என உயர்த்தப்பட உள்ளது. அதேபோல எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 100 கி.மீ வேகம் என்பது 120கி.மீட்டராக அதிகப்படுத்தப்படும்.
இரு சக்கரவாகனங்கள் செல்லும் வேகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக 80 கி.மீட்டராக உயர்த்தப்படும். பஸ், சரக்குவாகனங்கள் நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம், எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 90கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் ” என்று தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அப்ஹே டாம்லே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது ஆய்வுகளை முடித்து, தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.
அதில் சாலையில் நடக்கும் விபத்துக்களைக் குறைக்க, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் இருக்கும் வாகனத்தில், அதிகபட்ச வேகத்தில் இருந்து 10 சதவீதம் அதிகமாக வாகனத்தை செலுத்தவிடாமல் மாற்றியமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரைகள் மத்திய அரசு பரிசீலணை செய்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவாக அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது.
மேலும், வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்தும் நோக்கில், இருவழிச்சாலை, நான்கு தடச்சாலை, 6 தடச்சாலையை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.ஆதலால், இனிவரும் காலங்களில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு என்பது பிரச்சினையாக இருக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.