
மும்பையில் புறநகர் ரெயிலில் பயணிக்கும் பெண்களை ஈவ்டீஸிங் செய்ததாக கடந்த 6 மாதத்தில் 140 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இந்தசெயலுக்கு இளைஞர் ஒருவரின் முயற்சியே காரணம் என்றால் வியப்பாக இருக்கிறதா. அவர் அணிந்திருந்த எச்.டி. கேமிரா பொருத்தப்பட்ட “கூலிங்கிளாஸ் கண்ணாடி”கண்ணாடிதான் அனைவரையும் பிடிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்தவர் தீபேஷ்(வயது 27). இவரின் தந்தை உடல் நலம் சரியில்லாதவர் என்பதால், இவரின் தாய்தான் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்த பணம் ஈட்டி வருகிறார்.
தனது குடும்பத்தின் கஷ்டமான நிலையை உணர்ந்த தீபேஷ் தனது 16வயதிலேயே தனது தாய்க்கு துணையாக அவ்வப்போது சில வேலைகளுக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்துக்கு தேவையான பணத்தையும் ஈட்டி தனது தாய்க்கு கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் ஒரு நாள் தீபேஷ் வேலை முடிந்து மும்பை புறநகர் ரெயிலில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது,ரெயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில், சில ஆண்கள் ஏறிக்கொண்டு பெண்களை “ஈவ்டீஸிங்” செய்வதையும், கிண்டல் செய்வதையும் தீபேஷ் பார்த்து வேதனை அடைந்துள்ளார்.
உடனே அவருக்கு தனது தாயின் நினைவு வந்தது. இதேபோன்று தனது தாயும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஈவ்டீஸிங் தொல்லைக்கு ஆளாகி இருப்பார் என நினைத்து வேதனை அடைந்தார். தனது தாய் பணி முடிந்து வரும்போது ரெயிலில் எத்தனை சோதனைகளையும், ஈவ்டீஸிங்களையும், கிண்டல்களையும் சகித்து, கடந்து வந்து இருப்பார் என நினைத்து மனம் வெதும்பினார்.
உடனடியாக, பேஸ்புக் கணக்கில் “மும்பையின் மனிதர்கள்” என்ற பக்கத்தை தொடங்கி அதில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எழுதத் தொடங்கினார். அதில் ஏராளமான நண்பர்கள் சேர்ந்தனர். இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு டபிள்யு.ஏ.ஆர்.ஆர். (War Against Railway Rowdies) என்று பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
அதன்பின் தீபேஷ் எடுத்த முயற்சியால் கடந்த 6 மாதத்தில் மட்டும் பெண்களை ஈவ்டீஸிங் செய்த 140 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அது குறித்து தீபேஷ் கூறியதாவது-
ஒருநாள் நான் புறநகர் ரெயிலில் வந்து கொண்டு இருந்தபோது, சில ஆண்கள்சேர்ந்து ஒரு பெண்ணை “ ஈவ்டீஸிங்” செய்து கிண்டல் செய்துவருவதைப் பார்த்தேன். ஆனால், அவர்களுடன் தனியாக என்னால் சண்டையிட முடியாது. அதனால், அடுத்த நிறுத்தத்தில் இருந்த போலீஸிடம் சென்று இது குறித்து புகார் செய்தேன். முதலில் என்னுடன் சண்டையிட்ட போலீசார் உன் வேலைப் பார் என்று மிரட்டினர். பின்னர் நான் அவர்களுடன் வாக்குவாதம் செய்தபின், என்னுடன் போலீசார் வந்தனர். அதற்குள் அந்த பெண்ணை கிண்டல் செய்த நபர்கள் ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. என் தாயும் இதுபோல் தினமும் வேலைக்குசென்றுவிட்டு, ரெயிலில் வருகிறார். அவருக்கும் இதேபோன்ற நிலைதானே ஏற்படும், அவரும் ஈவ்டீஸிங் கொடுமைக்கு ஆளாவார் என நினைத்தேன். இதை தடுக்க முடியாதா?, இதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தேன். அதன்பின் தான் எச்.டி. கேமிரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடியை வாங்கினேன்.
நான் பார்க்கும் ஒவ்வொரு ஈவ்டீஸிங் சம்பவத்தையும் இந்த கண்ணாடி மூலம் வீடியோ, புகைப்படம் எடுத்து ஆதாரமாக எடுத்துக் கொண்டு போலீசிடம் தெரிவித்தேன். முதலில் ஏற்க மறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எனது ஆதாரங்களைப் பார்த்தபின், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார். என்னுடன் 40 போலீசார் கொண்ட சிறப்பு படையை உருவாக்கி செயலில் இறக்கினார்
மேலும், எனது பேஸ்புக் பக்கத்தில் நான் தொடங்கிய “வார்” (War Against Railway Rowdies) பக்கத்தின் நண்பர்களும் இதில் இணைந்தனர். ரெயிலில் எங்கெல்லாம் ஈவ்டீஸிங் நடக்கிறது என்பதை கண்டறிந்து, அடுத்த ரெயில் நிலையத்தில் எங்களின் போலீஸ் படைக்கு தெரிவித்து அந்த நபர்களை பிடிக்க உதவினர்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் பெண்களிடம் ஈவ்டீஸிங் செய்த 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “மும்பையின் மனிதர்கள்” என்ற எனது வார்த்தை அனைவரையும் தூண்டியுள்ளது.
மும்பையில் பெண்களை பாதுகாக்க நான் எடுத்திருக்கும் முயற்சி தொடக்கம் தான். இதை பின்தொடர்ந்து பலரும் முன்னெடுப்பார்கள்.நான் பெண்கள் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்து இருக்கிறேன். அதை என்வீ்ட்டில் இருந்தே தொடங்கினேன். என் தாய் எனக்கு பெண்களை மதிக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களை மதிக்க கற்றுக்கொண்டு ஆண்கள் சிறப்பாக வளர்க்கப்பட்டால் பெண்கள் மீதான கண்ணோட்டம் மாறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீபேஷின் கதை நிச்சயம் பலருக்கு ஊக்கமாக அமைந்து, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க அதிகமான மக்களை வெளிக்கொண்டு வர உதவியாக இருக்கும் என நம்பலாம்.