வானத்தில் இருந்து விழுந்தது “மனித கழிவா”, “பறவை கழிவா”? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

First Published Dec 3, 2017, 2:16 PM IST
Highlights
Falling human waste bird watcher?


டெல்லி விமானநிலையம் அருகே குடியிருக்கும் மக்கள் மீது அடிக்கடி விழும் கழிவுகள் விமானத்தில் இருந்து திறந்துவிடப்படும் மனிதக்கழிவுகளா, அல்லது பறவையின் கழிவுகளா என்பதை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம், விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், விமானநிலையம் அருகே மக்கள் வசிக்கும் பகுதியில் விழும் கழிவுகளை சேகரித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இருக்கிறார்கள்.

விமானநிலையம் அருகே குடியிருக்கும் மக்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. விமானங்கள் தரையிறங்கும்போது, கழிவறையில் இருக்கும் கழிவுநீரையும், மனிதக்கழிவுகளையும் விமானப் பணியாளர்கள் வானத்தில் திறந்துவிட்டுவிடுவார்கள். இது அப்பகுதியில் வசிக்கும் மனிதர்கள் மீதும், வீடுகள்மீதும் விழும். இது தொடர்பான பிரச்சினை கடந்த ஆண்டு எழுந்தபோது, பசுமைத் தீர்ப்பாயம் ஒர் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, விமானம், அல்லது பதிவு செய்யப்பட்ட விமானநிறுவனங்கள் தரையிறங்கும் போது, மனிதகழிவுகளை  அல்லது கழிவறை கழிவுகளை வானத்தில் திறந்துவிட்டால், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் விமானநிறுவனங்கள் அதை சரிவரபின்பற்றுவதில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், மீண்டும் விமான நிலையத்தின் அருகே குடியிருக்கும் மக்கள் மீது வானத்தில் இருந்து மழையாக கழிவுநீரும், மனிதக்கழிவுகளும் விழத் தொடங்கி இருக்கின்றன.

இது தொடர்பான மனு மீதா விசாரணை வெள்ளிக்கிழமை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வந்தர் குமாரிடம் வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், “தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம், விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புகுழு மாதிரிகளை சேகரித்து, அதை சோதனைக்கு அனுப்பி, மனிதர்களின் கழிவுகளா, அல்லது பறவைகளின் கழிவுகளா என்பது குறித்து இம்மாதம் 5 ந்தேதிக்கு முன்பாக அறிக்கை அளிக்கவேண்டும்.

மேலும், விமானத்தில் திடீரென ஆய்வு நடத்தி, கழிவறைகளின் தொட்டி காலியாக இருக்கிறதா அல்லது கழிவுகள் குடியிருப்பு பகுதிகள் மீது கொட்டப்பட்டு இருக்கிறதா, அல்லது வேறு ஏதாவது இடத்தில் கொட்டி விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.
விமானங்களில் பயணிகளின் கழிவுகளை சேகரித்த விமான தரையிறங்கியவுடன் தனியாக வாகனம் வந்து அதை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றும், இதற்கு தனியாக விமானநிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும்.

இதைத் தவிர்ப்பதற்காக வானத்தில் இருந்து விமானம் தரையிறங்கும்போது, கழிவுத்தொட்டியை பணியாளர்கள் திறந்துவிடுகின்றனர். இந்தகழிவுகள் சாலையில் செல்லும் மனிதர்கள் மீதோ அல்லது வீடுகளின் மீதோ அல்லது வேறுஏதாவது இடங்களிலோ விழந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தி, சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

click me!