
கன்னியாகுமரியை புரட்டி எடுத்த ஓகி புயல், தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை நோக்கி நகர்கிறது.
ஓகி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 16000 மரங்களும் 3600 மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.
சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மீனவர்களின் படகுகளும் சேதமடைந்துள்ளன. அதனால், விவசாயிகள், மீனவர்கள் என பலதரப்பினரும் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் கடுமையான பாதிப்புகளை ஓகி புயல் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழகம் மற்றும் கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இந்நிலையில், லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த ஓகி புயல், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த புயல் காற்று வீசும். இதனால், இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.