
பஞ்சாப் மாநிலம், அமர்தசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட பல சீக்கிய குருதுவாராக்களில் செய்யப்படும் அன்னதானத்துக்கும், அதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
அமர்சரஸ் பொற்கோயிலை சிரோன்மணி குருதுவாரா பிராபாந்த்தக்குழு(எஸ்.ஜி.பி.சி.) நிர்வகித்து வருகிறது. அந்த அமைப்பின் தலைவர் கிர்பால் சிங்பதுங்கர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது-
மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. வரியில் இருந்து அன்னதானம், பிரசாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இதற்கு முன் விதிக்கப்பட்ட வாட் வரியில் இருந்து அன்னதானத்துக்கு பயன்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்து.
அமர்தசரஸ் பொற்கோயில் மட்டுமல்லாமல், அனந்தபூர் சாஹிப்பில் உள்ள தக்காத்கேஸ்கார்க், தல்வாண்டிசபோ ஆகிய இடங்களில் உள்ள குருதுவாராக்களில் நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நெய், சர்க்கரை, மாவு, அரிசி, பருப்பு வகைகளும் ரூ.75 கோடிக்கு வாங்குகிறோம். இதில் ஜி.எஸ்.டி.யில் நெய்க்கு 12 சதவீத வரியும், சர்க்கரைக்கு 18 சதவீதமும், பருப்பு வகைகளுக்கு 5 சதவீதமும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக எங்களுக்கு ரூ.10 கோடி செலவாகும்.
குருதுவாராவில் பயன்படுத்தப்படும் சிரோபா துணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகளை ஆண்டுக்கு 15 லட்சம் மீட்டர் வாங்குகிறோம். பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே இந்த பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. நோயாளிகளுக்கு மருந்துகள், மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆதலால் குருதுவாராக்களில் வழங்கப்படும் அன்னதானம், அதன் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.