
அயோத்தில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலை முஸ்லிம்கள் எதிர்தால், அவர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பல ஆண்டுகளாக தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், உ.பி. மாநிலத்தின் சர்க்காரி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.பிரிஜ்பூஷன் ராஜ்புத் என்பவர் சமீபத்தில் 8.30 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலவற்றை அவர் கூறியுள்ளார். அதில், “ இந்தியா என்பது இந்துக்கள் இருக்கும் நாடு. அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டு எதிர்க்ககூடாது. முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் செல்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி உதவி அளிக்கிறது. ஆனால், இந்த நிதி உதவி திட்டத்தை இந்துக்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதேபோல, அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதையும் எதிர்க்க கூடாது.
அதை தவிர்த்து ராமர் கோயில் கட்டுவதை முஸ்லிம்கள் எதிர்த்தால், மெக்கா,மெதினாவுக்கு புனித பயணம் செல்ல முடியாது, அதற்கு அனுமதி தரமாட்டோம். இது நடக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத் கடந்த 12-ந்தேதி தனதுபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை, அந்த வீடியோவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.