
கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எம்எல்ஏவுக்கான பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏவை, சட்டமன்ற சபாநாயகரின் பரிந்துரைப்படியே பதவி பிரமாணம் செய்ய வேண்டும். அவரது அனுமதியில்லாமல், துணைநிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்தது செல்லாது.
குறிப்பாக தற்போது, பதவி பிரமாணம் செய்யப்பட்டுள்ள 3 எம்எல்ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள். இதில், சாமிநாதன் கடந்த 2016 பொது தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். டெபாசிட் கூட அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மீது கிரிமினல் வழக்கும் உள்ளது.
அதேபோல் சாமிநாதன், பாஜகவில் தலைவராக இருக்கிறார். மற்றொரு எம்எல்ஏவான செல்வகணபதி மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது. 3வது எம்எல்ஏ சங்கர் பாஜகவில் பொருளாளராக இருக்கிறார். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது, முறைகேடான செயல்.
எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவி பிரமாணம் செய்யும் முன், மாநில அரசுடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். அதில், ஏற்படும் கருத்துகளின்படி செயல்பட வேண்டும். ஆனால், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடு, அதுபோன்று எவ்வித செயலும் செய்யவில்லை.
இதனால், இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தில், எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் முடிவில், நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.