
மேற்கு வங்காள ஆளுநர் கே.என். திரிபாதி தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாகவும்,உதாசீனப்படுத்துவதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது-
இப்படி பேசாதீர்கள்
மாநிலத்தில் நடந்த வகுப்புவாத கலவரங்கள் குறித்து ஆளுநர் திரிபாதி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, அவர் பா.ஜனதாவினருக்கு ஆதரவாகப் பேசி, என்னை உதாசீனப்படுத்தினர். இப்படி எல்லாம் என்னிடம் நீங்கள் பேசீதார்கள் என்று நான் கூறினேன்.
ஆளுநர் திரிபாதி பேசியதைக் கேட்டால், பா.ஜனதா உள்ளூர் தலைவர் போல், மோசமாக பேசினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் யாருக்கும் வேலைக்காரர்கள் இல்லை.
அவமானப்பட்டது இல்லை
பா.ஜனதா தலைவர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் உங்களுக்கு விரும்பியதை செய்யுங்கள், ஏன் மற்றவற்றை பற்றி கருதுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.
நான் ஆளுநரிடம் கேட்பது எல்லாம் ஒன்றுதான் இது போல் மரியாதை குறைவாக நடந்து கொள்ளாதீர்கள். சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் மிகப்பெரிய அளவில் பேசுகிறார். நான் இங்கு யாருடைய கருணையையும் எதிர்பார்த்து வரவில்லை. நான் இது போல் எப்போதும் அசிங்கப்பட்டது இல்லை, அவமானப்பட்டது இல்லை. இந்த முதல்வர் பதவியில் இருந்து கூட விலகலாம் என நினைத்தேன்.
ஆளுநர் என்பது அரசியலமைப்பு சட்டப்பதவி, அவர் அவருடைய அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும். இவ்வாறு பரபரப்பு குற்றம்சாட்டினார்.
அதிர்ச்சியளிக்கிறது
இதற்கு பதிலடியாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்ைகயில், “ முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டுகளும், அவரின் பேசிய விதமும், மனநிலையும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆளுநரும், முதல்வரும் பேசிய விஷயங்கள் ரகசியமானது அதை வௌியிடக்கூடாது. யாரும்வௌியிடுவார்கள் என எதிர்பார்க்க கூடாது.
கடமை
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று முதல்வரிடம், ஆளுநர் வலியுறுத்தினார்.
ஆளுநர் தனக்கே உரிய பதவியில் மிகவும் கண்ணியமாக, உயர்ந்த நிலையுடன் நடந்து கொள்கிறார்.
மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து ஆளுநர் வாய்மூடி அமைதியாக இருக்க மாட்டார். மக்கள் தரப்பில் இருந்து ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டால் அது குறித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டியது ஆளுநரிடம் கடைமை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.