
காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறையினர், அதற்கு ஜிஎஸ்டி வரியும் போட்டு அதிர வைத்துள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தி வரி, விற்பனை வரி என பல்வேறு விதமான மறைமுக வரிகள் இருந்தன.
இந்த வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார், அந்த அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனர்.
மும்பை கண்டிவாலி பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததது. இதைப் பார்த்த போக்குவரத்து காவல் துறையினர், அந்த காரை அங்கிருந்து மற்றொரு வாகனம் மூலம் எடுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த காரின் உரிமையாளர், தனது காரை பெற்றுக் கொள்ள போக்குவரத்து காவல் துறையை அணுகினார். அப்போது அவர்கள் நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக 200 ரூபாய் அபராதமும்,அந்த காரை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்ல 400 ரூபாய் கட்டணமும், 72 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணம் என மொத்தம் 672 ரூபாய் வசூலித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் வேறு வழியின்றி அபராதத்தையும் கட்டிவிட்டு சென்றார்.