
பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது கட்டாயமாக்கி இருப்பதைப் போல், திருமணத்தையும் பதிவு செய்வது கட்டாயமாக்கும் சட்டத்திருத்தம் செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அவ்வாறு பதிவுசெய்யும் போது, ஆதார் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரே நபர் பல திருமணங்கள் செய்வது தடுக்கப்படும், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுப்பது உறுதிசெய்யப்படும் என அரசு நம்புகிறது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், தனது 270-வது அறிக்கையை மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், பிறப்பு, இறப்பை பதிவுசெய்வது கட்டாயமாக்கியதைப் போல், திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கலாமா என்று சட்ட அமைச்சகம் கேள்வி கேட்டு இருந்தது.
அதற்கு பதில் அளித்த இந்த ஆணையம், திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கலாம், அதை ஆதாரோடு இணைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
மேலும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் போதுமானது, இதற்காக தனியாக ஏதேனும் புதியசட்டம் இயற்றத் தேவையில்லை. ஏனென்றால்,
நாட்டில் பல்வேறு முக்கிய சமூகங்களும், மதங்களும் இருப்பதால், அது சிக்கலில் விட்டுவிடும் ஆதலால் சட்டத்திருத்தம் போதுமானது எனத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் போது, அதோடு மணமகன்,மணமகள் ஆதார் எண்ணையும் இணைத்தால், திருமணத்தில் செய்யப்படும் மோசடி வேலைகள் தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கும் இந்த சட்ட மசோதா உண்மையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
கடந்த 2013ம் ஆண்டு மாநிலங்கள் அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் 2014ம் ஆண்டு தோல்வி அடைந்தது.
இது தொடர்பாக ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு, “ திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டால்,
பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்லாக அமையும். அவர்களுக்கு சொத்துக்களில் உரிமை அளிக்கவும் முடியும்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.