26/11 போன்று மும்பையில் தாக்குதலா? மர்ம தொலைபேசி அழைப்பால் போலீசார் தீவிர விசாரணை

By Dhanalakshmi GFirst Published Aug 20, 2022, 11:12 AM IST
Highlights

மும்பையில் 26/11 தாக்குதல் போன்ற பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என்று கிடைக்கப் பெற்ற தகவலால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதய்பூர் டெய்லர் கொலை அல்லது சிந்து மூசேவாலா கொலை போன்று இந்த தாக்குதல் இருக்கலாம் என்று போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்கு மிரட்டல் குறுஞ்செய்தி வெள்ளிக் கிழமை இரவு வந்துள்ளது. டிராபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு என்று தனியாக உருவாக்கப்பட்டு இருக்கும் வாட்ஸ் அப் அழைப்புக்கு இந்த செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் நம்பரில் இருந்து இந்த மிரட்டல் செய்தி வந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மிரட்டல் விடுத்தவரின் தகவல் மற்றும் இடத்தை தேடினால் அது இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மும்பையில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஆறு பேர் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என்றும் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎன்என் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை உயர்மட்ட அதிகாரிகள் உறுதிபடுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

EOW Raids RTO Official :அதானியாக வாழ்ந்த ஆர்டிஓ ! 5 நட்சத்திர பங்களா, ஜக்குசி, தியேட்டர்: மலைத்த அதிகாரிகள்

பாதுகாப்புப் படையினர் இந்த மிரட்டல் தகவல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது வேண்டும் என்றே விடப்பட்ட மிரட்டலா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தீவிரவாதிகள் நடத்தி இருந்த தாக்குதல் இன்றும் அதிர்ச்சிகர சம்பவமாக வரலாற்றில் பதிந்துள்ளது. மும்பை மக்களின் மனதில் இருந்து மறைந்து விடவில்லை. பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லக்ஷர் இ தொய்பா இந்த தாக்குதலை நடத்தி இருந்தது. துப்பாக்கி சூடு மட்டுமின்றி, வெடிகுண்டுகளையும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தனர்.

தற்போது, இந்த தகவலை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் மகாராஷ்டிரா அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், சிவ சேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி விடுத்து இருக்கும் செய்தியில், ''முதலில் ரெய்காட், தற்போது போலீசாருக்கு மிரட்டல் செய்தி. மகாராஷ்டிரா மாநிலத்தில் என்னதான் நடக்கிறது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

டெல்லியில் இருந்து தெலங்கானா ஆந்திரா வரை கிடுக்கிப்பிடிக்கு தயாராகிறதா சிபிஐ? நடுக்கத்தில் அரசியல் புள்ளிகள்!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான், மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரைக்கு அருகே ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. படகில் இருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராய்காட் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தனர். 

பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த மகாராஷ்டிரா மானில் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''கரை ஒதுங்கிய 16 மீட்டர் நீளமுள்ள படகை மீனவர்கள் கண்டறிந்தனர். உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு படகில் சில வெடிமருந்துகளுடன், மூன்று AK-47 துப்பாக்கிகள் இருந்ததை மீட்டுள்ளனர். படகு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்று கொண்டிருந்த படகு அதிக அலை காரணமாக, உடைந்து கடற்கரையில் ஒதுங்கி உள்ளது. 

“மத்திய விசாரணை முகமைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படை அனுப்பப்படும்” என்று தெரிவித்து இருந்தார். 

இதன் மூலம் நடக்கவிருந்த பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது என்று போலீசாரும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும், தாக்குதல் நடத்துவதற்கு மிரட்டல் விடுத்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!