சிறுமிக்கு இப்படியும் நடந்த பாலியல் கொடூரம்... ஓடும் ரயிலில் 15 பேர்... கீழே குதித்து தப்பிய தாய்-மகள்!

First Published Nov 13, 2017, 2:59 PM IST
Highlights
Mother daughter jump off train near Kanpur after 10 to 15 men try to rape girl


சனிகிழமை இரவு ஹவுராவில் இருந்து ஜோத்புருக்குச் சென்ற ரயிலில் தனது 15 வயது மகளிடம் ஆண்கள் குழு ஒன்று பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயற்சித்ததால் மகளுடன் தாயும் கீழே குதித்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோல்கத்தாவில் இருந்து 40 வயதுப் பெண் ஒருவரும் அவரது 15 வயது மளும் தில்லிக்குச் சென்றனர். அவர்கள் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து  ஜோத்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் பயணித்தனர். அவர்கள் சென்ற ரயில், சந்தாரி மற்றும் கான்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது,  ரயிலில் பயணம் செய்த 10-15 பேர் அந்தச் சிறுமியை ரயில் பெட்டியின் கழிவறைப் பக்கம் இழுத்து,  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை அடுத்து அவர்களிடம் போராடித் தாக்குப் பிடிக்க இயலாமல், அந்தச் சிறுமியுடன் தாயும் ஓடும் ரயில் இருந்து குதித்தனர்.

ஓடும் ரயிலில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த நிலையில், இருவரும் நினைவிழந்து மயக்கம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் சுய நினைவு அற்ற நிலையில் இருந்த இருவரும் பின் நினைவுக்கு வந்த பின் எழுந்து சந்தரி ரயில் நிலையத்துக்கு நடந்து வந்துள்ளனர்.  ரத்தக் கறையுடன் இரு பெண்கள் இப்படி வருவதைப் பார்த்த மக்கள்  உடனடியாக  ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தில்லியில் பணிபுரிகிறார். அந்தச் சிறுமி 9 ஆம் வகுப்பு பயில்கிறார். இது குறித்து சனிக்கிழமை இரவு தெரியவந்ததை அடுத்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கான்புர் போலீஸ் தலைமை அதிகாரி ராம் மோகன் ராய் கூறினார். 

இதுகுறித்து அந்தப் பெண் கூறியபோது, ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோதே, பெட்டியிலிருந்த 10-15 பேர் என் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அப்போது, ரயில் இரண்டு நிலையங்களைக் கடந்து வந்தபோது, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் புகார் அளித்தேன். அதை அடுத்து அவர்களும் 3 பேரை  பிடித்துச் சென்றனர். ஆனாலும், அடுத்த சில நிமிடங்களில் விசாரிக்கப்பட்டு அவர்கள்  திரும்பிவிட்டனர். 

இதை அடுத்து அலஹாபாத்தை ரயில் கடந்த போது, அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தனர். இரவு சுமார் 10 மணி அளவில், நான்கு ஐந்து பேர் கழிவறை அருகே நின்று கொண்டனர். என் மகள் செல்லும் போது அவர்கள் என் மகளை அதற்குள் இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தனர். இதை அடுத்து பயந்து போன என் மகள் கத்தி சண்டையிட்டாள்.  நானும் உடனே போய் அவர்களுடன் சண்டையிட்டேன். ஆனால் அவர்கள் என் மகளின் ஆடைகளை நீக்கி அசிங்கப் படுத்தினர். வேறு வழி தெரியாமல் இருவரும் ரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்தோம்... என்று கூறினார்.  

இந்த சம்பவம் நடந்த போது இது ஹவுரா எல்லையில் நடந்தது என்றும், எங்கள் பகுதி இல்லை என்றும் சந்தாரி ரயில் நிலையத்தில் கூறப்பட்டது. எனினும், எல்லைப் பிரச்னைகளைக் கடந்து, சந்தாரி ரயில்வே போலீசார் அவர்களை மருத்துவமனையில்  சேர்த்து உதவினர்.

click me!