நிபுணர்களுடன் மோடி இன்று அவசர ஆலோசனை - பொருளாதார நெருக்கடி?

First Published Dec 27, 2016, 10:48 AM IST
Highlights


உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து, நாட்டில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி, இன்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால், நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், கருப்புப் பணத்தை ஒழித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந்த அறிவிப்பினை வெளியிட்டதாகவும், இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என பிரதமர் திரு. மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். 



இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் திரு. மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில் உள்ள நீதிஆயோக் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். ரூபாய் நோட்டு விவகாரத்தால், அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்ததாக கூறப்படுவது குறித்தும், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி ஒரு சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் திரு. மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

click me!