மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் அண்டை மாநிலமான மிசோரமில் வசிக்கும் மக்களிடையேயும் பரவி வருவதால் அங்கு இருக்கும் மெய்தி சமூக மக்கள் அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
மே 3 அன்று மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மே 4 அன்று இரண்டு பெண்கள் ஆடைகள் இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வீடியோ ஆன்லைனில் வெளியானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால் மக்களிடையே உருவான பதற்றம் அண்டை மாநிலங்களிலும் பரவி வருகிறது. பாதுகாப்புக்காக மிசோரத்தில் வசித்துவரும் மெய்தி சமூகத்தினர் அங்கிருந்து வெளியேறும்படி பாம்ரா (PAMRA) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதனால், மிசோரத்தில் இருந்து மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். 60 பேர் விமானம் மூலம் இம்பால் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதாக விமான நிறுவன அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதேபோல 41 பேர் மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரேன் சிங் பதவியில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது: காங்கிரஸ் திட்டவட்டம்
மிசோரத்தின் பல பகுதிகளில் இருந்து மெய்தி மக்கள் பேருந்துகள் மற்றும் கார்களில் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மிசோரம் டிஐஜி லல்லியன் மாவியா, ஆயுதப் படைக்கும் இந்திய ரிசர்வ் பட்டாலியனுக்கும் கடிதம் எழுதியுள்ளால். அதில், "அய்ஸ்வாலில் உள்ள மெய்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இச்சூழலில், மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் பவுலியன்லால் ஹாக்கிப் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்துள்ளார். வெளிப்படையாகப் பேசியுள்ள பாஜக எம்எல்ஏ ஹாக்கிப், மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசும் உடந்தையாக இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!
பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ள பவுலியன்லால் ஹாக்கிப், பிரதமர் மோடி தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார் என்றும் பிரதமரை சந்திக்க முயன்றபோது தன்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். "சந்திக்க நேரம் கேட்டு எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்று வரை எந்த பதிலும் வரவில்லை. நிலைமையின் தீவிரத்தை அவருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பிற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சைகோட்டைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவுலியன்லால் ஹாக்கிப், மத்திய அரசால் மட்டுமே மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதில் தான் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.