மின் தடை ஏற்படுத்தி பிடிப்பட்ட காதல் ஜோடியைக் கண்ட கிராம மக்கள் இளைஞர் ராஜ்குமாரை சரமாரி அடித்து நொறுக்கிவிட்டனர். பின்னர் சமாதானம் ஆகி இருவருக்கும் கல்யாணம் செய்துவைத்துவிட்டனர்.
பீகாரின் பெட்டியாவைச் சேர்ந்த ஒரு பெண், இருட்டில் தனது காதலனைச் சந்திப்பதற்காக தனது கிராமம் முழுவதும் மின் தடை ஏற்படுத்தி வந்துள்ளார். இருளின் தன் காதலன் ராஜ்குமாரைச் சந்திக்க ப்ரீத்தி ஒவ்வொரு முறையும் இந்தத் தந்திரத்தைச் செய்து வந்துள்ளார். இருவரையும் கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ப்ரீத்தி குமாரி - ராஜ்குமாரின் இந்த காதல் தந்திரம் கடந்த ஒரு வாரமாக மேற்கு சம்பாரனில் உள்ள இரு கிராமங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் கிராம மக்கள் இன்னல்களை அனுபவித்து வந்தனர்.
"ப்ரீத்தி ஒவ்வொரு இரவும் கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்து வந்தார். இதனால் கிராமத்தில் பல திருட்டுகள் நடந்துவிட்டன. அந்தப் பெண்ணால் நாங்கள் ரொம்ப சிரமப்பட்டோம்" என கிராமவாசியான கோவிந்த சவுத்ரி சொல்கிறார்.
போதையில் ரகளை செய்தவரை பிடித்து ஷூவால் மண்டையிலேயே அடிக்கும் போலீஸ்! வைரலாகும் கொடூரக் காட்சி!
இக்கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. பின்னர், கிராம மக்கள் தாங்களே காரணத்தைக் கண்டறிய முடிவு செய்தனர். அடுத்த முறை கிராமத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டபோது, ராஜ்குமாரையும் ப்ரீத்தியையும் ஒன்றாகப் பிடித்தனர். பிடிபட்டதால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இளைஞர் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கிராம மக்கள் ராஜ்குமாரை கம்பால் அடிப்பதையும், அவரது காதலி அவரை காப்பாற்ற முயற்சிப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.
பின்னர், இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களுப் கலந்து பேசி ராஜ்குமாருக்குமர் ப்ரீத்திக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருட்டுத்தனமாக சந்தித்து காதலை வளர்த்துவந்த ப்ரீத்தி - ராஜ்குமார் ஜோடியின் திருமணம் உள்ளூர் கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.