மாராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ், அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிர மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தினுடைய இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே ஈடுபட்டு வருவதற்கிடையே, அம்மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது மராத்தா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்டிர மாநில அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தங்களுக்கு அழைப்பு வரவில்லை என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐந்து மராத்வாடா மாவட்டங்களில் அரசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்ட பீட் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில அமைச்சரவையை கூட்டி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசித்தார். அதன்பிறகு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் ஜராங்கேவுடன் அவர் பேசினார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு தண்ணீர் மட்டும் அருந்த மனோஜ் ஜராங்கே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சாதிச் சான்றிதழ் வழங்குவதிலோ, ஓபிசி பட்டியலில் இணைப்பதிலோ அரசு தோல்வியடைந்தால், தனது முழு உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சாதிச் சான்றிதழ் வழங்குவது எப்படி என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. இந்த குழு தனது அறிக்கையை அரசிடம் ஏற்கனவே சமர்பித்துள்ளது. அது தொடர்பாக, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மனிதநேயத்தை வெறுப்பவர் ஜார்ஜ் சொரோஸ்: எலான் மஸ்க் காட்டம்!
குன்பி என்பது மகாராஷ்டிட மாநிலத்தின் ஒரு விவசாய சமூகமாகும். அம்மாநிலத்தில், ஓபிசி பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அச்சமூகத்தினருக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. அதனை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.