
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் என்னை கால்பந்து(புட்பால்)ஆக மாற்றி போட்டி போட்டு பந்தாடுகிறார்கள்'' எனத் லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடன் மோசடி செய்து வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பவர்களை நாட்டுக்கு கொண்டு வர சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்தியஅரசு பட்ஜெட்டில் கூறியிருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து விஜய் மல்லையா டுவிட்டரில் இதை தெரிவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “ கடன் மோசடி செய்தவர்கள், பொருளாதார குற்றம் இழைத்தவர்கள், நாட்டை விட்டி தப்பி ஓடி தலைமறைவாக இருப்பவர்களை திரும்பவும் கொண்டுவர சட்டம் கொண்டு வரப்படும்'' எனத் தெரிவித்து இருந்தார்.
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் விஜய் மல்லையா, இது குறித்து டுவிட்டரில் பதிவு வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் என்னை கால்பந்துபோல(புட்பால்) பயன்படுத்தி, போட்டி போட்டு பந்தாடுகின்றன. என் தொடர்பான செய்திகளை, ஆடுகளமாகப் பயன்படுத்தி, ஊடகங்கள் மகிழ்ச்சியாக செய்திகளை வௌியிட்டு வருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக நடுவர் யாரும் இல்லை.
சி.பி.ஐ. அமைப்பு என் மீது புனைந்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை, மோசமாக திட்டமிடப்பட்டவை, ஆதரமற்றவை. இந்த குற்றச்சாட்டுகளைப் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். பொருளாதாரம், வர்த்தகம், தொழிலையும் பற்றி சி.பி.ஐ. போன்ற உயர் விசாரணை அமைப்புக்கு என்ன தெரியும்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.720 கோடி கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணையை மல்லையாவுக்கு கடந்த வாரம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.