
சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம்வரை மட்டுமே எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்குவது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் முடிவெடுக்கும் என்று பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் நேற்று தெரிவித்தார்.
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு கார்டு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே என்றும், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் வரை வங்கியில் எடுக்கலாம் என்ற முதலில் கட்டுப்பாடு இருந்தது.
பின், 50 நாட்கள் முடிவுக்கு பின், அதாவது டிசம்பர் 30-ந்தேதிக்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, ஒரு நாளில் ரூ. 4500 ஆகவும், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி முதல் தேதி முதல் நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டும் வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
ஆனால், சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு ஏ.டி.எம்.களில் இருந்து மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, ஆனால், வங்கியில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் என்ற கட்டுப்பாடு தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால், அவசரத் தேவைக்கு வங்கியில் பணம் இருந்தும், அதை எடுக்க முடியாத சூழலில் மக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
ரூபாய் நோட்டு தடைக்கு பின், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போது வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு ரூ.24 ஆயிரமும், மாதத்துக்கு ரூ. 96 ஆயிரமும் எடுத்து வருகிறார்கள். சிலர் ஒரு லட்சம் வரைகூட எடுக்க வங்கிகளால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மிக விரைவில், சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்குவது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது, கரன்சி மேலாண்மை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதால், விரைவில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடும்.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், 90 நாட்கள் முடிவதற்குள் மீண்டும் நாட்டில் பணப்புழக்கத்தை சீராக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏறக்குறைய எடுக்கப்பட்டு விட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முடியும் தருவாயில் இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.