தொழிலதிபர் வீட்டில் சிக்கிய ரூ.13,000 கோடி கருப்பு பணம்...!!!!

First Published Dec 3, 2016, 9:57 AM IST
Highlights


கணக்கில் காட்டப்படாத 13 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம், தன்னிடம் இருப்பதாக முதல்முறையாக அறிவித்த, குஜராத் தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்‍கப்பட்டதை தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணத்தை மாற்றுவோர் மற்றும் வரி செலுத்தாத நபர்களை கண்டறியும் வகையில், வருமான வரித்துறையினர், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூவில் இரு அரசுப் பொறியாளர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்‍கில் காட்டப்படாத 5 கோடி ரூபாய் புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், வருமான வரித்துறையின் "ஐ.டி.எஸ். எனப்படும் வருமான அறிவிப்பு திட்டம்" அறிவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா என்பவர், தன்னிடம் கணக்கில் காட்டப்படாத 13 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் இருப்பதாக முதல் முறையாக அறிவித்தார். மேலும், அரசு விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த தயார் என்றும் அவர் கூறியிருந்தார். 

அதன்படி, முதல் தவணையான 975 கோடி ரூபாய் வரியை, கடந்த 30-ம் தேதிக்குள் அவர் செலுத்தியிருக்க வேண்டும் - ஆனால், மகேஷ் ஷா செலுத்த தவறியதால், வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்‍கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி செலுத்த தவறியது மற்றும் கருப்பு பணம் வைத்திருந்தது தொடர்பாக, தொழிலதிபர் மகேஷ் ஷா கைது செய்யப்படலாம் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

click me!