
மகாராஷ்டிராவின் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஷாஹாபூர் என்ற இடத்தில் நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்து பற்றி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நிலவை நோக்கி முன்னேறும் சந்திரயான்-3! ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை எட்ட வாய்ப்பு
"மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த சோகமான விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் நிர்வாகம் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவியை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன." என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
"இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த விபத்தில் பலியான 17 பேரில் 2 பேர் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ். இவர் பாலம் கட்டும் வி.எஸ்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ஆவார். மற்றொருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன். இருவரின் உடலையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலி காசோலைகளைக் கொடுத்து வங்கியில் ரூ.5 கோடியை அபேஸ் செய்த இன்ஜினியர்