மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“பாலம் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் இதுவரை 17 உடல்களை மீட்டுள்ளனர். படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்பதால் அங்கு அச்சம் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: மத்திய அரசு தகவல்!
சம்ருத்தி விரைவு நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தின் போது, பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.