இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. உத்தேச தேர்தல் தேதியை வெளியிட்டு, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த மாதம் மத்தியில் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஏற்பாடுகளுடன், இம்முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்வரவுள்ள தேர்தலில் 20 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளனர். இந்த வாக்காளர்களை மனதில் வைத்து ‘எனது முதல் ஓட்டு நாட்டுக்காக’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் கீழ் பல வகையான செயல்பாடுகள் நடத்தப்படவுள்ளன.
மாநிலங்களவை தேர்தல் சலசலப்பு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை!
‘எனது முதல் ஓட்டு நாட்டுக்காக’ பிரசாரத்தை வெற்றிகரமாக்க வீடியோ பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது முதல்முறை வாக்காளர்களுக்கு ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இளைஞர்களுக்காக வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இளம் வாக்காளர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் அதில் கிடைக்கும்.
இளைஞர்களை கவரும் வகையில், MyGov தளத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இளம் வாக்காளர்கள் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த தங்கள் பார்வையை ரீல்ஸ் மூலம் வெளிப்படுத்த இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை கவர்ச்சிகரமான முறையில் முன்வைக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க, இளைஞர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.mygov.in/task/reel-making-contest-desh-hamara-kaisa-ho/
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி மகிழ்ச்சி!
நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாட்டு சூழல் குறித்து இளைஞர்கள் இணையத்தில் பதிவுகள் எழுதலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க, இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.mygov.in/task/inviting-blog-desh-hamara-kaisa-ho/
நாட்டின் எந்தவொரு குடிமகனும், குறிப்பாக இளைஞர்கள், நம் நாடு எப்படி இருக்கும் என்பதை போட்காஸ்ட் பதிவு செய்து போட்டிக்கு சமர்ப்பிக்கலாம். உங்கள் போட்காஸ்டைப் பதிவுசெய்து சமர்ப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.mygov.in/task/create-podcast-desh-hamara-kaisa-ho/