1976-ம் ஆண்டுக்கு பின் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. என்.டி.ஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கிய நிலையில், 2 நாட்களாக புதிய எம்.பிக்கள் பதவியேற்று வந்தனர். இதை தொடர்ந்து இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டுக்கு பின் நடைபெறும் சபாநாயகர் தேர்தல் இதுவாகும்.
பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு: இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
எம்.பிக்களின் எண்ணிக்கை மற்றும் வாக்களிப்பை கணக்கில் கொண்டு தனிப்பெரும்பான்மையால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் 7 எம்.பி.க்கள் பதவியேற்க வில்லை என்பதால் அவர்களால் வாக்களிக்க முடியாது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிக்கு 232 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்களும் உள்ளனர். ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் 4 எம்.பி.க்களின் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருமித்த வேட்பாளருக்கான கடைசி வேண்டுகோளை விடுத்துள்ளார். "கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் முக்கிய எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு கொண்டு, சபாநாயகர் பதவி தொடர்பாக, அவைகளின் தலைவர்களுடன் பேசினோம். சபாநாயகர் போட்டியின்றி மற்றும் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது?
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கே.சுரேஷை முன்னிறுத்திய காங்கிரஸ் முடிவு குறித்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கூறுகையில், கே சுரேஷ் வேட்பாளராக இருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இதுகுறித்து எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இது ஒருதலைப்பட்சமான முடிவு," என்று அவர் கூறினார். இன்று தேர்தலுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷ் 29 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்ததால், லோக்சபா எம்.பி.,யாக அதிக காலம் பதவி வகித்தவர். அவர் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) செயல் தலைவராகவும், 17வது மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைமைக் கொறடாவாகவும் இருந்தார்.
கோட்டா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்பியான பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு மக்களவையின் பதவிக் காலத்துக்கு மேல் சபாநாயகர் பதவியேற்பது ஐந்தாவது முறையாகும். ஏழாவது மற்றும் எட்டாவது மக்களவைக்கு தொடர்ந்து இரண்டு முறை முழுமையாக பதவி வகித்த ஒரே தலைவர் காங்கிரஸ் தலைவர் பல்ராம் ஜாகர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.