கர்நாடகா தேர்தல் 2023: ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு; யாருக்கு எவ்வளவு சீட்!!

By Ganesh A  |  First Published Apr 14, 2023, 6:29 PM IST

கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ள நிலையில் ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு, சுற்று -1 முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.


கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ள நிலையில் ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு, சுற்று -1 முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதன்மூலம் 2023 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் முழுப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் தொங்கு சட்டசபையே அம்மாநிலத்தில் அமையும் என்பது தெரிய வந்துள்ளது. கர்நாடக தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கியது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாளாகும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும். இந்நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நாளாகும். மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கருத்துக் கணிப்பில் யார் யாருக்கு எவ்வளவு இடம்?

Latest Videos

ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக 98 முதல் 109 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 89 முதல் 97 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) 25 முதல் 29 இடங்களை கைப்பற்றும் என்றும் மற்றவை 1 இடத்தைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரை தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. இந்த 113 தான் அனைத்து கட்சிகளுக்குமான மேஜிக் எண்.

இதையும் படிங்க: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

பாஜகவுக்கு சாதகமா?  பாதகமா?

இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், குறிப்பாக பழைய மைசூர் பகுதியில் மும்முனைப் போட்டி நிலவுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உள்ளதன் காரணமாக ஆளும் பாஜக சில இடங்களை இழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலை விட காங்கிரஸ் சில இடங்களைப் பெறவும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆளும் கட்சிக்கு எதிரான காரணி இருந்தபோதிலும், காங்கிரஸுக்கு வெற்றியைக் கொடுக்கும் அளவுக்கு ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை இல்லாததால், காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியாமலும் போகலாம் என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

கட்சிகளின் வாக்கு சதவிகிதம் என்ன?

ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்த மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், காங்கிரஸ் 38 முதல் 40 சதவிகித வாக்குகளைப் பெறுமாம். அதே நேரத்தில் பாஜக 37 முதல் 39 சதவிகித வாக்குகளைப் பெறுமாம். இது காங்கிரஸை விட சற்று குறைவாகும். காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் மிக நெருக்கமாக இருக்கும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமும் மிகக் குறைவு என்பதால் பாஜகவை விட காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றாலும், வெற்றி பெறும் இடங்களில் காங்கிரஸுக்கு கணிசமான முன்னிலையை அளிக்காது என தெரியவந்துள்ளது. மேலும் ஜேடிஎஸ் 16 முதல் 18 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் மற்றவர்களுக்கு 5 முதல் 7 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்கலிக்கா வாக்குகளை இழக்கும் ஜேடிஎஸ்:

இந்த கருத்துக்கணிப்பின்படி, ஒக்கலிக்கா சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான டி.கே. சிவக்குமார், அதிகளவிலான ஒக்கலிக்கா வாக்குகளை பெறுவார் என தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் பெருவாரியான ஒக்கலிக்கா  வாக்குகள் ஜேடிஎஸ்-லிருந்து காங்கிரஸுக்கு மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஜேடிஎஸ் 12 இடங்களை இழக்கும் என்றும் கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: Karnataka Election 2023: யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள்; கருத்துக் கணிப்பில் சுவராஸ்ய தகவல்!!

கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது எப்படி?

இந்த கருத்துக் கணிப்பு மார்ச் 15 முதல் ஏப்ரல் 11 வரை கர்நாடகா முழுவதும் 20,000 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த சர்வே நடத்தப்பட்டபோது பெரும்பாலான கட்சி வேட்பாளர்களை அறிவிக்கப்படவில்லை. கட்சி வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு 2வது கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.

2018 ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு:

ஜன் கி பாத் உடன் இணைந்து ஏசியாநெட் சுவர்ணா இந்த கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. ஜன் கி பாத் இதற்கு முன்னர் 36 கருத்துக்கணிப்புகளை நடத்தி, பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாக கணித்துள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் துல்லியமான முடிவு கிடைக்கும் என்று ஜான் கி பாத் கணித்திருந்தது. அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் துல்லியமாக இருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டில், ஜான் கி பாத் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கருத்துக் கணிப்பை நடத்தி இருந்தது. அப்போது, வெளியான கருத்துக் கணிப்பில் பாஜக 102 முதல் 108 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 72 முதல் 74 இடங்களை கைப்பற்றும் என்றும், ஜேடிஎஸ் 42 முதல் 44 இடங்களைப் பெறும் என்றும்,  மற்றவர்கள் 2 முதல் 4 இடங்களைப் பெறுவார்கள் என்றும் வெளியாகி இருந்தது. சற்றேக்குறைய இந்த கணிப்பு சரியாகவே இருந்தது. அப்போதைய தேர்தல் முடிவில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!