கார்கில் போர் வெற்றி 25ஆவது ஆண்டு: திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தொடக்கம்!

By Manikanda Prabu  |  First Published Jun 13, 2024, 5:03 PM IST

டெல்லியில் இருந்து கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவத் துணைத் தளபதி தொடங்கி வைத்தார்


டெல்லியில் உள்ள உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இருந்து கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவத் துணைத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் ஓய்.கே.ஜோஷி, பணியில் உள்ள மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஒரு அதிகாரியும்,  13 ஜெஏகே ரைஃபிள்ஸ் (கார்கில்) பிரிவின் 13 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுபேதார் மெகர்சிங் வீர்சக்ரா விருதுபெற்றவர் நயிப் சுபேதார் கேவல் குமார் சேனா பதக்கம் பெற்றவர். இந்த அணியில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கார்கில் போரில் தீவிராக ஈடுபட்டு, ஆபரேஷன் விஜய் தீரச் செயல் விருதுகளைப் பெற்றவர்கள்.

Tap to resize

Latest Videos

25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் வெற்றி பெற தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது இந்தப் பயணத்தின் நோக்கமாகும். சவால் மிக்க பகுதிகள் வழியாக சுமார் 1029 கிலோ மீட்டர் பயணம் செய்து மோட்டார் சைக்கிள் வீரர்கள் திராஸ் பகுதியைச் சென்றடைவார்கள். இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வீரச் செயல் விருது பெற்ற 100-க்கும் அதிகமான வீரர்களையும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களையும் போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் மனைவியரையும் சந்திப்பார்கள்.

இந்த மோட்டார் சைக்கிள் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு 2024 ஜூன் 20 அன்று சென்றடையும். 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய ராணுவம், பாய்ன்ட் 5140-ஐ கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 25ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையிலும், கார்கில் வீரர்களின் துணிவு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையிலும்,  இந்தியா முழுவதற்குமான  மோட்டார் சைக்கிள் பயணம் நேற்று துவங்கியது. கிழக்கே தின்ஜான், மேற்கே துவாரகா, தெற்கே தனுஷ்கோடி என நாட்டின் மூன்று முனைகளிலிருந்து ஒவ்வொரு அணியிலும் 8 மோட்டார் சைக்கிள்களுடன் மூன்று அணியினர் புறப்பட்டுள்ளனர். ஜூன் 26ஆம் தேதியன்று இந்த அணியினர் டெல்லிக்கு சென்ற பின் இரண்டு அணிகளாகி  இரு வேறு வழிகள் வழியாக திராஸ் பகுதியை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கில் வெற்றியை நினைவு கூரும் இந்திய ராணுவம்: நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம்!

இந்தியாவுக்குள் கடந்த 1999ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியை முற்றுகையிட்டன. கார்கில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், படாலிக் போன்ற பகுதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கார்கில் போர் நடத்தப்பட்டது. இந்த போருக்கு ஆப்பரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது.

உயரமான மலைப் பகுதியில் சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து, கார்கிலை மீட்டது இந்திய ராணுவம். கார்கில் போர் முடிவுக்கு வந்த தினத்தை கார்கில் விஜய் திவாஸ் என அறிவித்து அப்போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆப்பரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்கு தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!