இந்தியாவில் தட்டுப்பாடு எதுவும் இல்லையா.? மக்கள் முட்டாள்களா..? கொந்தளிக்கும் ப.சிதம்பரம்..!

By Asianet TamilFirst Published Apr 28, 2021, 9:59 PM IST
Highlights

மக்கள் எல்லோரையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 3.50 லட்சமாக உள்ளது. தினந்தோறும் 2,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகிவருகிறார்கள். வட இந்தியாவின் பல மாநிலங்களில்  படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலைவருகிறது. கொரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து வருகிறார்கள். 
ஆனால், நாட்டில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார். இதேபோல உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தெரிவித்திருந்தார். இவர்களுடைய பேச்சுக்கு மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில், “இந்தியாவில் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியிருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்று உ,பி. முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையும் எனக்கு வியப்பாக இருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையா?, போலியானவையா?
மருத்துவர்கள் எல்லோரும் பொய் சொல்கிறார்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்மைக்கு மாறாகப் பேசுகிறார்களா? மக்கள் எல்லோரையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

click me!