வாட்ஸ் அப் யுனிவெர்சிட்டிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் குட்டு!

By Manikanda Prabu  |  First Published Nov 28, 2023, 3:22 PM IST

சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மனுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது


மகாராஷ்டிராவில் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 பேர் உயிரிழப்பதாகக் கூறும் பொதுநல மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் வழக்கின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று கூறியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஜித்சிங் கோர்படே என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி ஆரிப் டாக்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்து விட்டது.

Tap to resize

Latest Videos

வழக்கு விசாரணையின்போது, ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்நிலைகளில் சுமார் 1,500 முதல் 2000 பேர் வரை உயிரிழப்பதாக மனுதாரரின் வழக்கறிஞர் மனிந்திர பாண்டே கூறினார். அப்போது, மனுதாரருக்கு மரணங்கள் குறித்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இருந்து தகவல்களை பெற்றதாக மனிந்திர பாண்டே கூறினார்.

இதனால், கடுப்பான நீதிமன்றம், அந்த மனு தெளிவற்றது என்றும், அதில் விவரங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தது. “சமூக ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், பொதுநல வழக்குகளின் மனுக்களில் ஒரு பகுதியாக இருக்க முடியாது. மனுதாரர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பற்றவராக இருக்க முடியாது. நீங்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்.” என தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் மனு என்பதால் அதனை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்து விட்டது. “யாரோ ஒருவர் சுற்றுலாவிற்குச் சென்று தற்செயலாக நீரில் மூழ்கி மரணமடைகிறார். அதற்கெல்லாமா பொதுநல வழக்கு தாக்கல் செய்வீர்கள்? ஒருவர் விபத்தில் மூழ்கி இறந்தால், அது எப்படி விதிகள் 14 மற்றும் 21இன் கீழ் அடிப்படை விதிகளை மீறுவதாகும்.?” என நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தைக் கொண்டு துரத்திய சிங்கப்பெண்!

அப்போது, இதுபோன்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பெரும்பாலான விபத்துக்கள் பொறுப்பற்ற செயல்களால் ஏற்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மகாராஷ்டிர அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொரு நீர்வீழ்ச்சி மற்றும் நீர்நிலைகளிலும் காவல்துறையினரை பாதுகாப்புக்கு நியமிக்க முடியுமா?” என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீரில் மூழ்கி விபத்து ஏற்படும் பல சமயங்களில் அங்கு மீட்பு குழுவினர் இருப்பதில்லை; அதனால் பாதிக்கப்பட்டவரின் சடலம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, அத்தகைய நீர்வீழ்ச்சி அல்லது நீர்நிலையை மனுதாரர் பார்வையிட்டுள்ளாரா? அதில், ஆபத்தானது அல்லது பாதுகாப்பற்றது என எதையாவது அவர் உறுதிசெய்துள்ளாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, சரியான விவரங்களுடன் சிறந்த பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெறுமாறு மனுதாரரை கேட்டுக்கொண்டது. அதை ஏற்று மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.

click me!