வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள், முற்போக்கான கருத்துக்கள், சிந்தனைகள் நிரம்பியவர், அரசை எதிர்த்து துணிச்சலாக கூர்மையான கேள்விகளை வீசக்கூடியவர், கிரிக்கெட் ரசிகர் எனப் பல்வேறு பரிமானங்களைக் கொண்ட மூத்த நீதிபதி டிஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள், முற்போக்கான கருத்துக்கள், சிந்தனைகள் நிரம்பியவர், அரசை எதிர்த்து துணிச்சலாக கூர்மையான கேள்விகளை வீசக்கூடியவர், கிரிக்கெட் ரசிகர் எனப் பல்வேறு பரிமானங்களைக் கொண்ட மூத்த நீதிபதி டிஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஒய்.சந்திரசூட் நியமனத்துக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துவிட்டார். நவம்பர் 9ம் தேதி 50-வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவி ஏற்க உள்ளார்.
இந்த பதவியில் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிவரை சந்திரசூட் நீடிப்பார். உச்ச நீதிமன்றத்தில் சமீபகாலங்களில் நீண்டகாலம் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்ற பெருமை சந்திரசூட்டுக்கு சேரும்.
இவரின் தந்தை ஒய்வி சந்திரசூட்டும் நீண்டகாலம் தலைமை நீதிபதியாக இருந்தவர்.
கடந்த 1978ம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒய்வி சந்திரசூட் 1985ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார், உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஒய்விசந்திரசூட் தான். தந்தை மகன் இருவரும் நீண்டகாலம் தலைமை நீதிபதியாக அலங்கரிக்க உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்துக்கு கடந்த 2016ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட டிஒய் சந்திரசூட், 6 ஆண்டுகளில் தலைமை நீதிபதி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். இந்த 6 ஆண்டு காலத்தில் டிஒய் சந்திரசூட் பல்வேறு அமர்வுகளில் இடம் பெற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். முற்போக்கான கருத்துக்களாலும், சிந்தனைகளாலும், கூர்மையான சாட்டையடி விமர்சனங்களாலும் அ ரசுக்கு நெருக்கடியும் அளித்துள்ளார்.
நீதிபதி சந்திரசூட் கருத்தில் முக்கியமானது, “ ஜனநாயகத்துக்கு எதிர்ப்பு என்பது சேப்டி வால்வு” போன்றது அதை அடக்க நினைக்காதீர்கள். எதிர்ப்புகள், எதிர்கருத்துகள் வர வேண்டும்” என்று தெரிவித்தவர்.
ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வது இயற்கைக்கு மாறானது அல்ல என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கியவர் சந்திரசூட். அந்தரங்க உரிமை என்பது தனிப்பட்ட உரிமை என்று கூறிய சந்திரசூட், ஐபிசியில் 377வதுபிரிவு குற்றமில்லை. வரலாற்றால் ஒரு தவறை சரிசெய்வது கடினம். ஆனால் எதிர்காலத்திற்கான பாதையை நாம் அமைக்கலாம் என்று தீர்ப்பளித்தார்.
2வதாக ஆதார் கொள்கையில் வரலாற்று தீர்ப்பை நீதிபதி சந்திரசூட் வழங்கினார். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் கருத்துப்படி அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆதார் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர். இந்த அமர்வில் இருந்த சந்திரசூட் இதிலிருந்து வேறுபட்டு தனிநபரின் ஆதார் விவரங்களைப் பெறுவது அவர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதாகும் என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்
பீமா கோரிகான் வழக்கில் 5 மனிதஉரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கருத்துத் தெரிவித்த நீதிபதி சந்திரசூட், “ ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது சேப்டிவால்வு போன்றது. எதிர்ப்பு என்பது வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம். விரும்பத்தகாத விஷயங்களை செய்பவர்களை துன்புறத்துவதன் மூலம் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் குரல்வளை நெறிக்கப்படக்கூடாது” என்று தெரிவித்தார்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதிலும் சந்திரசூட் விரும்பினார். இதற்காக ஆர்டிஐ விண்ணப்பங்களை பரிசீலிக்க தனியாக ஆன்லைன் தளத்தையும் உருவாக்கப்படும் என சந்திரசூட் தெரிவித்தார்.
தலைமை நீதிபதியின் பணி என்பது வழக்கில், “ எந்தெந்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவது என்பதில் அவருக்கு பங்கு இருக்கிறது, அரசியல்சாசன் அமர்வுக்கு எந்த வழக்கை மாற்றுவது என்பதிலும் தலைமை நீதிபதியின் கடமை” என்று சந்திரசூட் தீர்ப்பளித்தார்.
இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்... குடியரசு தலைவர் ஒப்புதல்!!
சமூகத்திலும், பணியிடங்களிலும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சந்திரசூட் தீர்ப்புகள் அமைந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹாதியா வழக்கில் வரலாற்று தீர்ப்பை சந்திரசூட் வழங்கினார். ஒரு பெண் தனக்குரிய மதத்தையும், கணவரையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது எனத் தீர்ப்பளித்தார்.
“சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான வழக்கில் பூப்படைந்த பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் தடையில்லை” என்று வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வில் நீதிபதி சந்திரசூட்டும் ஒருவராக இருந்தார்.
“ராணுவத்திலும், கப்பற்படையிலும் பெண்களுக்கும் நிரந்திர இடம் ஒதுக்க வேண்டும். பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்றவாதத்தை புறம் தள்ளி ஆண்களுக்கு நிகாரன உரிமையை பெண் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும்” என்று சந்திரசூட் வரலாற்று சிறப்பு தீர்ப்பை வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் டிஒய் சந்திரசூட்:யுயு லலித் பரிந்துரை
சமீபத்தில் நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டது. “20 முதல் 24 வாரங்கள் அடங்கிய கருவை ஒரு பெண் பாதுகாப்பான முறையில் கலைக்க உரிமை உள்ளது. குழந்தைபெற்றுக்கொள்ளும் சுயமுடிவு, கண்ணியம், தனிஉரிமை உள்ள திருமணமாகாத ஒரு பெண், அந்த குழந்தையை பெற்றெடுப்பதா அல்லது கருவைக் கலைப்பதா என்று முடிவு செய்யவேண்டியது அவரின் உரிமை” என தீர்ப்பில் தெரிவித்தார்.
மற்றொரு முக்கிய வழக்கில், “கருணைக் கொலையை அங்கீகரித்தும், நீதிபதி சந்திரசூட் தீர்ப்பு வழங்கினார். ஒரு நபர் வாழும்போது எந்த அளவு கண்ணியமாக வாழ உரிமை இருக்கிறதோ அதேபோல இறப்பதற்கும் கண்ணியமான இறப்பைக் கோர உரிமை இருக்கிறது, அவர் தனக்குரிய மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுக்கவும் உரிமை இருக்கிறது” என்று சந்திரசூட் தீர்ப்பளித்தார்
வடமாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்திருந்தவர்கள் மீது கும்பல் தாக்குதல் அதிகரித்து அதில் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதி சந்திரசூட் விசாரித்தார். இந்த வழக்கில் கும்பல் தாக்குதலை நிறுத்த பல்வேறுவழிகாட்டுகளை சந்திரசூட் அமர்வுதான் மாநில அரசுகளுக்கு வகுத்துக்கொடுத்தது.
உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? யுயு லலித்தின் பரிந்துரை கேட்கிறது மத்திய அரசு
அயோத்தி ராமர் ஜெமன்பூமி நிலம் தொடர்பான வழக்கில் இந்துக்களின் உரிமையை உறுதி செய்த அரசியல்சாசன அமர்வில் சந்திரசூட்டும் இருந்தார். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் மசூதிகட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் சந்திரசூட் அளித்தார்.
கொரோனா பரவல் காலத்தில் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி நடந்து வந்தபோது, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். இந்த நேரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து ஒவ்வொருநாளும் நீதிபதி சந்திரசூட் காட்டமாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை
டெல்லி நொய்டாவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த 40 மாடிக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வில் சந்திரசூட்டும் இடம்பெற்றிருந்தார்.
நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவருவதில் சந்திரசூட் ஆர்வமாக உள்ளார், அரசியல்சாசன அமர்வு காகிதத்தை பயன்படுத்தாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என்று சந்திரசூட் தெரிவித்தார். அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை செய்யப்படுதல், தனியாக யூடியூப் உருவாக்குதலை சந்திரசூட் முன்னெடுத்தார்.
யார் இந்த சந்திரசூட்?
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1978 பிப்ரவரி 22 முதல் 1985 ஜூலை11ம் தேதிவரை தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன்தான் டிஒய் சந்திரசூட். தலைமைநீதிபதியாக நீண்டகாலம் பதவிவகித்தவரும் ஒய்.வி.சந்திரசூட்தான்.
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் இதற்கு முன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக, 2013ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதியிலிருந்து பணியாற்றி அங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு, மே 13ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக டிஒய் சந்திரசூட் நியமிக்கப்பட்டார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முன் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக சந்திரசூட் 1998ம் ஆண்டு ஜூனில் உயர்த்தப்பட்டார். அதன்பின், அந்த ஆண்டே மாநில அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி டிஒய் சந்திரசூட் டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் இளநிலை பொருளாதாரம் படிப்பு முடித்தார். அதன்பின், டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி முடித்து, அமெரிக்காவின் ஹார்வார்ட் சட்டக்கல்லூரியில் முனைவர் பட்டமும், எல்எல்எம் பட்டமும் முடித்தார். உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி எடுத்த சந்திரசூட், மும்பை பல்கலைகழகத்தில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது