கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகரா மாவட்டம் போகபுரா கிராமத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் திறந்தவெளி மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ இந்திய விமானப்படைக்கு சொந்தமான கிரண் பயிற்சி விமானம் ஒன்று கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள மக்காலி கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. ஒரு பெண் விமானி உட்பட இரு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது:” என்று தெரிவித்தனர்
இதையும் படிங்க : Vasundhara Raje's Presence at PM Modi Rally: மீண்டும் வசுந்தரராஜே சிந்தியா; கர்நாடகா தேர்தல் கொடுத்த பாடமா?
மே 8 ராஜஸ்தானில் விபத்து
இந்திய விமானப்படையின் (IAF) MiG-21 போர் விமானம், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே கடந்த மாதம் 8-ம் தேதி வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். சூரத்கர் தளத்தின் வடகிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்து விமானி மீட்கப்பட்டார்” என்று விமானப்படை தெரிவித்திருந்தது. மேலும் உயிரிழப்புக்கு வருந்துவதாகவும், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த இந்திய விமானப்படை, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
மே 30 அன்று அவசரமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்
கடந்த 30-ம் தேதி, கர்நாடகாவில் இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம், விமானத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சைக்காக விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ரெட்பேர்டு என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட விமானம், சாம்ப்ரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பின்னர் ஹொன்னிஹால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, அப்பகுதியில் மரங்களோ, தடைகளோ இல்லாததால் பெரும் சோகம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 வரை சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!