இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Nov 3, 2023, 6:55 PM IST

கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது 'உலக உணவு இந்தியா 2023' என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை புதிய வளர்ச்சி அடையும் துறையாக' அங்கீகரிக்கப்பட்டதற்கு உலக உணவு இந்தியா நிகழ்வு ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், அரசின் தொழில் சார்பு கொள்கைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளின் விளைவாக இந்தத் துறை ரூ. 50,000 கோடிக்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உணவு பதப்படுத்துதல் துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், இது இந்தத் தொழில்துறையில் புதிய நிறுவனங்களுக்குப் பெரும் உதவிகளை வழங்குகிறது என்றார்.

Latest Videos

undefined

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புக்கான ஆயிரக்கணக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் செயலாக்க உள்கட்டமைப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு பதப்படுத்துதல் துறையில் விரைவான வளர்ச்சிக்கு அரசின் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகள் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் விரைவான நகரமயமாக்கல் குறித்துப் பேசிய பிரதமர், விவசாயிகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உணவுத்துறையில் பல அம்சங்கள் உள்ளதாக கூறினார். இந்த சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமிடலின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பைக் ஓட்டுவேன்: டிடிஎஃப் வாசன் அதிரடி!

உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியாவின் வளர்ச்சியின் மூன்று முக்கிய தூண்களாக சிறு விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும்  பெண்கள்  இருப்பதாகப் பிரதமர் கூறினார். இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த பிரதமர், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், அதன் மூலம் உணவுப் பதப்படுத்தும் தொழில் பயனடைவதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர் என அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் உணவு அறிவியலில் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்திய உணவு வகைகள் மற்றும் உணவுப் பன்முகத்தன்மை இந்திய பெண்களின் திறன்கள் மற்றும் அறிவின் விளைவு என்று கூறினார். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், முரப்பா போன்ற பல பொருட்களின் சந்தைகளைப் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். உணவுப் பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயல்பான திறன் இந்தியப் பெண்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெண்களுக்கான குடிசைத் தொழில்களும் சுய உதவிக் குழுக்களும் ஒவ்வொரு மட்டத்திலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப கட்ட மூலதனம் வழங்கப்பட்டதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

கலாச்சார பன்முகத்தன்மை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தியாவில் உணவு பன்முகத்தன்மையும் உள்ளது என அவர் தெரிவித்தார்.  இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை உலகின் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு வாய்ப்பாகும் என்று பிரதமர் கூறினார். இந்தியா மீதான உலகின் ஆர்வம் அதிகரித்து வருவது பற்றி  குறிப்பிட்ட பிரதமர், உலகெங்கிலும் உள்ள உணவுத் தொழில்கள் இந்தியாவின் உணவு மரபுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார். இந்தியாவின் நிலையான உணவு கலாச்சாரம் அதன் ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சிப் பயணத்தின் விளைவாகும் என்று அவர் கூறினார். இந்தியாவின் நிலையான உணவு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசிய பிரதமர், நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று கூறினார்.

click me!