அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (யுசிபிபி) அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் - 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடக்கும் போது கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக, 2019-20ஆம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-21ஆம் ஆண்டில் 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021-22 இந்த எண்ணிக்கை 63,927ஆக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அக்டோபர் 2022 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை கைது செய்யப்பட்ட 96,917 இந்தியர்களில் 30,010 பேர் கனேடிய எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை ராமர் சிலையை சுமந்து செல்லும் பிரதமர் மோடி: கருவறையில் வைக்கப்படும் சிலை எது?
உடன் வரும் மைனர்கள் (AM), குடும்பப் பிரிவில் உள்ள தனிநபர்கள் (FMUA), வயது வந்த ஒற்றை பெரியவர்கள் மற்றும் துணையில்லாத குழந்தைகள் (UC) என கைது செய்யப்பட்டவர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், வயது வந்த பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2023ஆம் நிதியாண்டில், வயது வந்த ஒற்றை இந்தியர்கள் 84,000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 730 ஆதரவற்ற சிறார்களும் அடங்குவர்.
அமெரிக்க மத்திய அரசின் நிதியாண்டானது அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை கணக்கிடப்படுகிறது. இதனிடையே, “இந்த மக்கள் பிரான்ஸ் போன்ற நாடுகள் உட்பட நான்கு விமானங்கள் நிலையங்கள் மூலம் மெக்சிகோவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திற்கு வருகின்றனர். பின்னர், வாடகை பேருந்தில் எல்லை வரை வருகின்றனர். தங்கள் நாட்டில் பயம் இருப்பதாக அவர்கள் கூறலாம். இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து 45,000 பேர் எங்கள் தெற்கு எல்லையைத் தாண்டியுள்ளனர்.” என செனட்டர் ஜேம்ஸ் லாங்க்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.