ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதனை அம்மாநில அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புதிய கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும், அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
undefined
இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 22 ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, நெறிமுறைகளை விடுத்து, பிரதமர் நரேந்திர மோடி 500 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு நடந்து செல்லவுள்ளார். அப்போது, தற்போதுள்ள இடத்தில் இருந்து குழந்தை ராமர் சிலையை எடுத்துச் செல்லும் மதிப்புமிக்க பணியை கோயில் அறக்கட்டளை நிர்வாகம் பிரதமர் மோடிக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இதுகுறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நடந்து வருவார் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
'பிரான் பிரதிஷ்டை' (சிலை முதன்முறையாகக் கண்களைத் திறப்பதற்கு முன் நடத்தப்படும் மதச் சடங்குகள்) நடைபெறும் போது, 'யஜ்மான்' (இந்து மத விழாவை ஏற்பாடு செய்தல்) என பிரதமர் மோடி தலைமையில், முக்கிய பூஜை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய அர்ச்சகர்கள் பங்கேற்கவுள்ளனர். பூஜைக்குப் பிறகு, 'சால் மூர்த்தி' சிலை (தற்போதுள்ள தற்காலிகக் கோவிலில் வழிபடப்படுவது) புதிய கோயிலில் உள்ள புனிதமான இடத்தில் வைக்கப்படும் அதே வேளையில், தற்போது செதுக்கப்பட்ட மூன்று ஐந்தடி சிலைகளில் ஒன்று குடியிருக்கும் தெய்வமாக (அச்சல் மூர்த்தி) கருவறையில் வைக்கப்படும்.
மூன்று சிற்பிகளுக்கு குழந்தை ராமரின் மூன்று வெவ்வேறு சிலைகளை உருவாக்கும் பணியை கோயில் அறக்கட்டளை வழங்கியது. அதில், எந்த சிலை பிரதான தெய்வமாக கருவறையில் வைக்கப்படவுள்ளது என்பதை அறக்கட்டளை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ராஜஸ்தானில் சிறந்த தரமான பளிங்கினால் செதுக்கப்பட்ட அல்லது கர்நாடகாவில் அடர் வண்ண கிரானைட்டில் செதுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்று கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அத்தகவல்கள் கூறுகின்றன.
பூஜா பட் நில வழக்கு: நீலகிரி மாவட்டம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த ஆண்டு மகர சங்கராந்திக்கு மறுநாள் தொடங்கும் கும்பாபிஷேக விழாவின்போது, புதிய சிலைக்கு சரயு மற்றும் பிற புனித நதிகளில் இருந்து வரும் நீரைக் கொண்டு குளிப்பாட்டி, அயோத்தி நகருக்குள் அடையாளமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள சுமார் 8,000 நபர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்ப அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்வேறு கோவில்கள், மடங்கள், மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் 3,500 பேருக்கும், மீதமுள்ளவை அரசியல் மற்றும் பிற அமைப்புகளுக்கு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள், உயர்மட்ட தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பப்படவுள்ளது.
இதன்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சில கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்படும் அனைத்து விருந்தினர்களுக்கும் இருக்கை ஏற்பாடுகளை உருவாக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் விழாவானது பல்வேறு ஊடகங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.