2 ஆண்டுகளில் 1,240.6 மில்லியன் டாலர் ஆயுர்வேத பொருட்கள் ஏற்றுமதி: அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தகவல்

By SG Balan  |  First Published Aug 9, 2023, 1:08 PM IST

2021-2022ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 612.1 மில்லியன் டாலர் மற்றும் 2022-2023ஆம் நிதி ஆண்டில் 628.25 மில்லியன் டாலர் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 1,240.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

2021-2022ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 612.1 மில்லியன் டாலர் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2022-2023ஆம் நிதி ஆண்டில் 628.25 மில்லியன் டாலர் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

Latest Videos

undefined

இந்தியா எக்ஸிம் வங்கி வழங்கிய தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள அமைச்சர், மாத்திரைகள், பவுடர், ஜெல், நெய், பேஸ்ட், மாத்திரைகள், கண் மூக்கு சொட்டு மருந்துகள், லோஷன்கள், தோல் மற்றும் முடி பராமரிப்புப் பொருட்கள் போன்ற பல்வேறு ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.

7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்

"கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது" என்றும் அமைச்சர் கூறினார்.  ஆயுர்வேத மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எம்பி கார்த்திகேய சர்மா எழுப்பிய கேள்விக்கு சோனோவால் பதில் அளித்துள்ளார்.

"ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க அரசாங்கத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் ஆயுர்வேதத்தை சர்வதேச அளவில் பரப்புவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குகிறது. வர்த்தக கண்காட்சிகள், ஏற்றுமதிக்காக பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளில் ஆயுஷ் தயாரிப்புகளுக்கு (சந்தை அங்கீகாரம்) பதிவு செய்தல் போன்றவை ஆயுர்வேதத் துறைக்கு ஊக்கம் அளிக்கின்றன" என்று அமைச்சர் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகம் 24 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. மேலும், 46 நிறுவன அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பல்வேறு நாடுகளின் 15 தலைவர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன். ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக 35 வெளிநாடுகளில் 39 ஆயுஷ் தகவல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

விக்ரம் லேண்டர் எஞ்சின் செயலிழந்தாலும் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

ஆயுஷ் அமைச்சகம் மட்டுமின்றி வணிகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட பிற அமைச்சகங்களும் அனைத்தும் ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஆசியான் போன்ற பல்வேறு நாடுகளின் மன்றங்களுடன் இருதரப்பு உரையாடலில் ஈடுபட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (AYUSHEXCIL) நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 8(4) இன் கீழ் கடந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது வெளிநாடுகளில் ஆயுஷ் தயாரிப்புகளை பதிவு செய்வதற்கான தடைகளை சமாளிக்க கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு ஆதரவாக உள்ளது எனவும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் எடுத்துக்கூறியுள்ளார்.

'பயப்படாதீங்க அதானி பற்றி பேச மாட்டேன்': நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராகுல் மாஸ் பேச்சு!

click me!