இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே: கமல்நாத்!

By Manikanda PrabuFirst Published Oct 17, 2023, 12:07 PM IST
Highlights

இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே என காங்கிரஸ்  மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்

எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், அதற்கு முன்னதாக மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத் தேர்தல்கள் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில்  திரண்டுள்ள கட்சிகள், மாநில அளவில் எதிரும்புதிருமாக இருக்கக் கூடியவை. எனவே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

இந்த நிலையில், இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்க்உ மட்டுமே என மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கும், இந்திய கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸுக்கும் இடையே மத்தியப்பிரதேச தேர்தலில் உரசல் நீடிக்கும் நிலையில், கமல்நாத் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இணைந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்நாத், அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி எங்களுக்கு உதவ வேண்டும் என்பதால், அக்கட்சியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். “பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதியும் ஆர்வமாக உள்ளது. அகிலேஷ் யாதவ், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதால், நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.” என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்.

சமாஜக் கட்சி தனது சின்னத்தில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தத் தயார் என்று சொன்னாலும் கூட அவர்களின் சின்னத்தில் போட்டியிட எங்கள் வேட்பாளர்கள் தயாராக இல்லை என்றும் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வலுவாக உள்ள மத்தியப் பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று வெளியான தகவலுக்கு, இந்திய கூட்டணியின் முக்கிய கவனம் தேசியத் தேர்தல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கன்ஷியாம் திவாரி தெரிவித்தார். “மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருப்பதால், இந்திய கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் விவாதிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அதன்மூலம் அரசியல், வேட்பாளர் ஆதரவு அக்கட்சிக்கு கிடைக்கலாம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!