தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By SG BalanFirst Published Oct 17, 2023, 11:21 AM IST
Highlights

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

தன்பாலின திருமணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை அறிவித்துள்ளது. ஐந்து நீபதிகள் கொண்ட இந்த அமர்வில் சட்ட அங்கீகாரத்துக்கு 2 நீதிபதிகள் ஆதரவாகவும் 3 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு கூறியுள்ளனர். இதன் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது என்று முடிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார். சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது முற்போக்கான சட்டத்தை நாடு இழந்துவிடும் என்றும் அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருமண அமைப்பு நிலையானது, மாறாதது என்று கூறுவது தவறு என்றும் 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தவரை இப்போது ஏற்புடையதாக மாறியுள்ளன என்றும் தலைமை நீதிபதி எடுத்துக்கூறியிருக்கிறார். தன்பாலின தம்பதிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கு ஆதாரபூர்வமான தரவுகள் இல்லை என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்

தன்பாலின ஈர்ப்பு நகர்புறங்களில் மட்டும் இருப்பது என்றோ மேல்தட்டு மக்களிடம் மட்டுமே உள்ளது என்று கருத்து சரியல்ல எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தன்பாலின ஈர்ப்புடையவர்கள் உள்பட அனைவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்க தார்மீக உரிமை உண்டு; சுதந்திரம் என்பதன் பொருள், ஒருவர் தான் விரும்புபவம் விதமாக இருப்பதுதான் என்றும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பகுதியாகும்; சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம் எனவும் இது வாழும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது சமூகம் பாகுபாடு காட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுவதில் எந்த பாகுபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

ஷாக் கொடுத்த ஷெரிகா... 26 வயதில் மரணம்... உலக அழகி போட்டியில் கலக்கியவருக்கு இப்படி ஒரு வியாதியா!

click me!