புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : புதிய 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ள மத்திய அரசு.. என்ன ஸ்பெஷல்?

By Ramya sFirst Published May 26, 2023, 3:46 PM IST
Highlights

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் சிறப்பு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார். இந்த சிறப்பு நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணின் லயன் கேபிடலும், அதன் கீழே "சத்யமேவ் ஜெயதே" என்ற வாசகம் இருக்கும். இடது பக்கத்தில் "பாரத்" என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், வலதுபுறத்தில் "இந்தியா" என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

நாணயத்தில் ரூபாய் சின்னம் மற்றும் சர்வதேச எண்களில் சிங்க தலைக்கு கீழே எழுதப்பட்ட மதிப்பு 75 இருக்கும். நாணயத்தின் மறுபக்கம் நாடாளுமன்ற வளாகத்தின் படம் காட்டப்படும். "சன்சாத் சங்குல்" என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்தில் மேல் சுற்றளவிலும், "Parliament Complex" என்று ஆங்கிலத்திலும் கீழ் சுற்றளவில் எழுதப்படும். நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டத்துடன் வட்ட வடிவில் இருக்கும். அதன் விளிம்புகளில் 200 வரிசைகளைக் கொண்டிருக்கும். 35 கிராம் நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கியது

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் 25 கட்சிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், "ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில்" புதிய கட்டிடத்தில் எந்த மதிப்பும் இல்லாததால், திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும், ஆனால் அதனை பிரதமர் மோடி திறந்து வைப்பதால்  எதிர்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளை முடிவை கடுமையாக விமர்சித்துள்ளது. "நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு அப்பட்டமான அவமதிப்பு" என்று முத்திரை குத்தியது.

click me!