24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு பாதிப்பு..! இந்தியாவில் கோர முகத்தை காட்டும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published Apr 19, 2020, 10:02 AM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 27 பேர் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 15,712 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 507 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 27 பேர் பலியாகி உள்ளனர்.

ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 2,231 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 3,651 பேர் பாதிக்கப்பட்டு 211 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 365 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,893 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,407 பேரும், தமிழ்நாட்டில் 1,372 பேரும், ராஜஸ்தானில் 1,351 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் தளர்வு..! போக்குவரத்து துறைக்கு அவசர சுற்றறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் ஏப்ரல் 20ம் தேதி முதல் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அங்கு மக்கள் சில பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!