
ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக் கூறி கைது செயய்ப்படும் தமிழக கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு ஷேசாலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் பலர் ஆந்திர வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற தமிழக இளைஞர்கள், செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி பேருந்தில் வைத்தே அவர்களை ஆந்திர போலீசார் கைது செய்ததும் செய்திகளாக வெளிவந்தன.
தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தே அதிகப்படியான தொழிலாளர்கள் ஆந்திரா வனப்பகுதிக்குள் நுழைந்து இச்சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆந்திர அரசும் வலியுறுத்தியது.
ஆந்திராவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அரசும் கூலித் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தொழிலாளர்களை ஆந்திராவுக்குள் சில கும்பல்கள் அனுப்பி வைக்கின்றன. பணம் கிடைக்கிறதே, குடும்பக் கஷ்டம் கரைந்து போகுமே என்ற ஆசையில் செல்லும் சில தொழிலாளர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கும், சவுக்கடிக்கும் இரையாகி வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஆந்திரா மாநிலம் பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் கடத்தியாக திருவண்ணாமலை மாவடடம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை அம்மாநில போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.