
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து காங்கிரஸ் நாட்டைத் துண்டாட முயற்சிப்பதாக பா.ஜ.க கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க.வேட்பாளருக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், யாருமே எதிர்பாரத நிகழ்வாக பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது ஆதரவை பா.ஜ.க. வேட்பாளருக்குத் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கும் நிதிஷின் இம்முடிவு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்று கூறி, பா.ஜ.க.வுக்கான தனது ஆதரவு குறித்து விளக்கம் அளித்தார்.
ஆனால் இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் தனது முடிவினை நிதிஷ்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இக்கோரிக்கையினை நிதிஷ்குமார் ஏற்கவில்லை.
இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் சித்தார்த் நாத் சிங், “பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியது 100 சதவீதம் உண்மை. இதற்கு முந்தைய காலகட்டங்களில் காங்கிரஸ் ஜனநாயகத்தை துண்டாடியதையம், அவமதித்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ராம்நாத் கோவிந்த் வெற்றி வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து யாரும் நாட்டைத் துண்டாட முடியாது.”இவ்வாறு சித்தார்த் நாத் சிங் கூறினாரா்