
இந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டுக்கான கவுண்ட் டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் சூழலை மாற்றிவிட்டன. மத்திய அரசின் நேரடி வருவாய், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 18% அதிகரித்துள்ளது.
கடந்த காலாண்டில் 7% வளர்ச்சியை தொட்டு இருக்கிறோம். இரட்டை இலக்க வளர்ச்சி என்பதுதான் நமது இலக்கு. அதற்கு சிறிது காலம் ஆகும். ஆனால் அந்த இலக்கையும் நாம் அடைந்துவிடுவோம்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறேன். நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து நம் நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் நம் நாட்டில் மிகுந்த நம்பிக்கையுடன் முதலீடு செய்துவருகிறார்கள் என தெரிவித்தார்.
2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், வறட்சியை சந்தித்துள்ள விவசாயிகள், அரசிடமிருந்து விவசாயத்திற்கு பெரும் ஆதரவை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது விவசாயிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.