பாகிஸ்தானை 9 ஏவுகணைகள் மூலம் பிரதமர் மோடியும், இந்தியாவும் மிரட்டிய விவகாரம் தெரியவந்துள்ளது
ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அவரை விடுவிக்குமாறு பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தது. மேலும், இந்தியாவின் தீவிர தூதரக, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பிறகு மார்ச் 1ஆம் தேதியன்று அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அபிநந்தன் சிறைபிடிக்கப்படதையடுத்து, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“கோப மேலாண்மை: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய தூதரக உறவு” என்ற அவரது புத்தகத்தில் இதுகுறித்த பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது இந்திய ஏவுகணைகள் தங்களை குறிவைத்து தாக்கும் வாய்ப்பால் பதற்றமடைந்த பாகிஸ்தான் அரசாங்கம், அப்போதைய பிரதமர் இம்ரான் கானுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உரையாடலை நாடியதாக அஜய் பிசாரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் மோடியால் ‘இரத்தம் சிந்திய இரவு’ என்று குறிப்பிடப்படும் அந்த இரவு, இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக வெளிப்பட்டதாகவும், இறுதியில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தனின் விடுதலைக்கு அது வழிவகுத்ததாகவும் பிசாரியா தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நேரலையில் ஒளிபரப்பும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்!
அமைதிக்காக பிரதமர் மோடியை அணுகுவதற்கான முயற்சியை மேற்கோள் காட்டியுள்ள அஜய் பிசாரியா, “அப்போதைய பாகிஸ்தான் தூதர் சோஹைல் மஹ்மூத்திடமிருந்து நள்ளிரவில் அழைப்பு வந்தது. பிரதமர் மோடியுடன் பேச அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அந்த சமயத்தில் மோடி இல்லை. ஏதேனும் அவசரச் செய்தியாக இருந்தால் அவரிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என நான் கூறினேன். அடுத்தா நாள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவித்தார்.” என அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அபிநந்தனுக்குத் தீங்கு நேர்ந்தால், நிலைமை மோசமாகும் என இந்தியாவின் தீவிர அச்சுறுத்தலை மேற்கத்திய தூதர்கள் பாகிஸ்தானிடம் எடுத்துரைத்ததையும் அப்புத்தகம் விவரிக்கிறது. ஏவுகணைகளின் அச்சுறுத்தல் பாகிஸ்தானை பதற்றமடையச் செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் நெருங்கிய நண்பர் ஒருவர் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி உரையாடியதையும், பயங்கரவாதத்தை கையாள்வதில் குறியாக இருப்பதையும் புத்தகம் வெளிப்படுத்துகிறது. மோடியால் ராணுவ நடவடிக்கை குறித்த அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதாகவும், அந்த இரவை ஒரு சாத்தியமான ‘கொலை இரவு’ எனவும் பிசாரியா குறிப்பிட்டுள்ளார். பால்கோட் வான்வழித் தாக்குதலுக்கு முந்தைய இந்திய அரசாங்கத்தின் உள் பேச்சுக்களையும் புத்தகம் ஆராய்கிறது. மேலும், இராஜதந்திரத்திற்கான கதவுகளை இம்ரான் கான் மூடியதாகவும், aவரது நிலைப்பாடு ஒருபக்கம் இருந்தாலும், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் ஜெனரல் பஜ்வா தலைமையிலான ராணுவம், ராஜதந்திர வழிகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டுள்ளது.