பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் பருவமழையை பாதிக்கும் எல் நினோ நிகழ்வு 90 சதவீத நிகழ்தகவு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் இந்தியாவில் இயல்பான மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும், தென் கர்நாடகா மற்றும் வட தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் லடாக் போன்ற தீபகற்ப பகுதிகளில் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் பருவமழையை பாதிக்கும் எல் நினோ நிகழ்வு 90 சதவீத நிகழ்தகவு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எல் நினோவின் பாதகமான தாக்கத்தை ஈடுசெய்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையை கொண்டுவரும், நேர்மறையான இந்தியப் பெருங்கடல் இருமுனையானது பருவமழைக் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜவஹர்லால் நேரு நினைவு தினம்: கொட்டும் மழையில் ராகுல் காந்தி மரியாதை - பிரதமர் மோடி ட்வீட்
இந்திய வானிலை மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டி. சிவானந்த பாய் பேசிய போது " இந்த ஆண்டு எல் நினோ மற்றும் நேர்மறை இந்திய பெருங்கடல் முனையம் இருக்கும். மத்திய இந்தியாவில் எல் நினோவின் தாக்கம் நேர்மறை இந்திய பெருங்கடல் இருமுனையம் மூலம் ஈடுசெய்யப்படலாம். ஆனால் வடமேற்கு இந்தியாவின் விஷயத்தில் அது நடக்காமல் போகலாம்” என்று தெரிவித்தார்.
எனவே ராஜஸ்தானை உள்ளடக்கிய வடமேற்குப் பகுதியைத் தவிர்த்து, நாடு முழுவதும் இயல்பான பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன்-செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு நீண்ட கால சராசரியில் 96 சதவீதமாக இருக்கும் என்றும், நீண்ட கால சராசரியில் 4 சதவீத வரம்புடன் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, 96-106 சதவீதத்தில் இயல்பானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி ஏழு நாட்கள் நிலையான விலகலுடன் கேரளாவில் தொடங்கும். 2005 முதல் கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதிக்கான முன்னறிவிப்புகளை இந்திய வானிலை மையம் வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, பருவமழை மே 29 அன்று கேரளாவை அடைந்தது. கடந்த 18 ஆண்டுகளில் (2005-2022) கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதியின் கணிப்புகள் 17 ஆண்டுகள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Rajasthan Rain - ராஜஸ்தான் கனமழைக்கு 12 பேர் பலி! ஆரஞ்சு எச்சரிக்கை!