ஒடிசா மாநில ரயில் விபத்தையடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான குழு அச்சம்பவத்தை எப்படி கையாண்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2ஆம் தேதி மாலையில் ஏற்பட்ட சோகமான ரயில் விபத்து என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இந்திய ரயில்வே இத்தகைய துயர சம்பவத்தை எப்படி கையாளப்போகிறது என்பதை நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த வனப்பகுதியில், எங்கு திரும்பினும் அழு குரல்களும், சடலங்களும், ரத்த வெள்ளத்தில் மிதந்த படுகாயமடைந்தவர்களுமாக காட்சியளித்தனர். மீடியாவின் கேமிராக்கள் சம்பவ இடத்தை துளைத்திருந்தன. பேரழிவு நடந்த சில மணி நேரங்களில் சம்பவ இடத்தை அடைந்திருந்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். விபத்து நடந்த இடம், அதன் தொழில்நுட்பக் கூறுகளைப் புரிந்துகொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த அவர் மனதில் இந்த சம்பவத்தை எப்படி கையாள்வது என்பது பற்றிய ஒரு உத்தி இருந்திருக்கலாம்.
அடுத்ததாக நாம் என்ன செய்ய வேண்டும், அடுத்த திட்டம் என்ன, அமைச்சர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை கவனித்து கொண்டிருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றுவது, காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்தல், சேதமடைந்த ரயில் பாதையை விரைவாக சரி செய்தல் ஆகிய திட்டங்களே முதன்மையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருக்கும் மனிதவளத்தை வைத்துக் கொண்டு துரிதமாக செயல்பட்டு இதனை சாத்தியமாக்க வேண்டும்.
“குறைந்தது 70 உறுப்பினர்களைக் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை இரண்டாக பிரிக்கப்பட்டு, அணிகளும் மூத்த பிரிவு பொறியாளர்களால் மேற்பார்வையிடப்பட்டன. அந்த பொறியாளர்கள் ரயில்வேயின் துணை மேலாளர் மற்றும் பொது மேலாளரால் கண்காணிக்கப்பட்டனர்.” என மூத்த ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அதிக தொழில்நுட்ப திறன் தேவைப்பட்டது. அதேசமயம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்து அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ரயில்வே வாரியத்தின் தலைவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். உயர் அதிகாரிகள் சிலர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கும், வேறு பல மருத்துவமனைகளுக்கும் அனுப்பட்டுள்ளனர்.
“சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மட்டும் முக்கியமல்ல, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. அதனால்தான் நிலைமையை மேற்பார்வையிட மூத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.” என விபத்து நிகழ்ந்த இடத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
விபத்து நடைபெற்றது ஒடிசா மாநிலம் என்றாலும், தலைநகர் டெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சகத்தின் தலைமையகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தின் நிகழ்வுகள் நான்கு கேமராக்கள் கொண்டு மூத்த அதிகாரியால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. முன்னேற்றத்தின் அனைத்து விவரங்களும் தொடர்ந்து அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!
அனுபவமிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அஸ்வினி வைஷ்ணவுக்கு பேரிடர் மேலாண்மை என்பது புதிய விஷயம் அல்ல. 1999ஆம் ஆண்டில் இதே ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த வைஷ்ணவ், புயல் நெருக்கடியைக் கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
களத்தில் பணியாற்றிய ஊழியர்களை சோர்வாகாமல் பார்த்துக் கொள்வது முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். அவர்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் கடுமையான வேலை சூழ்நிலைகளை சமாளிக்க உதவியுள்ளது. “விபத்து நடந்த இடத்திலோ அல்லது மருத்துவமனையிலோ பணிபுரியும் ஒவ்வொரு குழுவிற்கும் சரியான நேரத்தில் ஓய்வு வழங்கப்பட்டு பார்த்துக் கொள்ளப்பட்டது.” என பணிகளை ஒருங்கிணைத்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் கடந்த 4ஆம் தேதி அப்-லைனில் ரயில் போக்குவரத்து செயல்பாட்டுக்கு வந்தவுடந்தான் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தொடர்ந்து 51 மணிநேரம் களத்தில் தனது குழுவினருடன் இருந்த அஸ்வினி வைஷ்ணவ், ரயில் போக்குவரத்து செயல்பாட்டுக்கு வந்தபோது, தலை குனிந்து கைகளை கூப்பி கடவுளிடம் பிரார்த்தனை செய்தது இங்கு நினைவுகூரத்தக்கது.