ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

By Manikanda Prabu  |  First Published Jun 7, 2023, 12:19 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேபோல், சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள், சீரமைப்பு பணிகள் முடிவடைந்து அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா மாநிலம் செல்லவும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை அழைத்து வரவும், பாதுகாப்பாக இருப்பவர்களை சொந்த மாநிலம் அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதேபோல், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதற்காக அவர்களின் உடல்கள் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு திரண்டிருக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர். இதுவரை 177 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. அவர்களது உடல்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஸ் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

விபத்தில் சிக்கி சிலரது உடல்களும், முகங்களும் சிதைந்து போயுள்ளன. சிலரது முகம் மின்சாரம் தாக்கி கருகி போயுள்ளது. இதனால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கிழக்கு ரயில்வேயின் டிவிஷனல் மேலாளர் ரிங்கேஷ் ராய் கூறுகையில், “ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் 200 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் 1,100 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 900 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். உயிரிழந்த 278 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் கண்டறிய முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.

click me!