“அந்த ரூ.13,000 கோடி என் பணம் இல்லை, விரைவில் உண்மையை வெளியிடுவேன்” - குஜராத் தொழிலதிபர் பகீர்

First Published Dec 4, 2016, 10:13 AM IST
Highlights


“கமிஷனுக்காகத்தான் ரூ.13 ஆயிரம் கோடியை கருப்பு பணத்தை வருமானவரித்துறையினரிடம் தெரிவித்தேன். அது என்னுடைய பணம் இல்லை. அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவேன்” என குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா தெரிவித்தார்.

கணக்கில் வராத வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் ரூ.13 ஆயிரத்து 860 கருப்பு பணத்தை வருமானவரித்துறையினரிடம் தெரிவித்து, வரி செலுத்தாமல் தலைமறைவாக இருந்த மகேஷ் ஷாவை இந்த பேட்டிக்கு பின் போலீசார் கைது செய்தனர். 

மத்திய அரசு கடந்த ஜூன் முதல் செப்டம்பர் 30 வரை தாமாக முன்வந்து கணக்கில் வராத வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதில் கருப்பு பணம் பதுக்கியோர் 45 சதவீதம் அபராதம்,வரி செலுத்தி தண்டனை, வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என அறிவித்தது. இந்த திட்டத்தில் அரசுக்கு ரூ. 62 ஆயிரத்து 500 கோடி வரி வருவாய் கிடைத்து.

இந்த திட்டம் முடிவதற்கு கடைசி நாளன்று, குஜராத் தொழிலதிபரும், ரியல் எஸ்டேட் வர்த்தகரும்  மகேஷ் ஷா என்பவர், ரூ.13 ஆயிரத்து 860 கோடி கருப்பு பணக் கணக்கை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தார். இதற்கு 45 சதவீதம் வரி என ரூ. 6,237 கோடியை ெசலுத்த வருவாய் துறையினர் உத்தரவிட்டனர் மீதமிருந்த, ரூ.7,623 கோடியை வெள்ளை பணமாகவும் அறிவித்தனர். 

இந்த தொகையின் முதல் தவணையான ரூ.1,560 கோடியை நவம்பர் 30-ந்தேதிக்குள் செலுத்தவும் ஆணையிட்டு இருந்தனர்.

ஆனால், மகேஷ் ஷா தனது வரிக்கான முதல்தவணையான ரூ.1,560 கோடி தொகையை நவம்பர் 30-ந் தேதிக்குள் செலுத்தத் தவறினார். இதையடுத்து,   மகேஷ் ஷா தெரிவித்த ரூ.13 ஆயிரம் கோடி தொகையையும் கருப்புபணம் என வருமான வரித்துறையினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மகேஷ் ஷா தலைமறைவானார். அவரை தேடும் பணியில் வருமானவரித்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு வந்தனர். 

கடந்த மாதம் 30 மற்றும் டிசம்பர் 1ந்் தேதிகளில் மகேஷ் ஷாவின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். ஆனால்,கருப்பு பணம் பதுக்கியதற்கான எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. இதையடுத்து மகேஷ் ஷாவை கைது செய்யும்பணியை முடுக்கிவிட்டனர். 

இந்நிலையில், குஜராத்தில் ஒரு இந்தி சேனலுக்கு மகேஷ் ஷா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ என்னிடம் இருக்கும் பணம் அனைத்தும் எனக்குசொந்தமானது அல்ல. நான் வருமானவரித்துறையினரிடம் கணக்கு காண்பித்த ரூ.13,860 கோடியும் என்னுடையது அல்ல. இந்த பணம் பல தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள், உள்ளிட்ட  பலருடையது. 

யாருடைய பணத்தை நான் தாமாக முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தில் தெரிவித்தேனோ அவர்கள் எனக்கு வரி செலுத்த பணம் கொடுக்காததால் என்னால் முதல் தவணையை செலுத்த முடியவில்லை.  நான் எங்கும் ஒளிந்துகொள்ளவில்லை. சில காரணங்களுக்காகத்தான் ஊடகங்கள் பார்வையில் இல்லாமல் இருந்தேன். 

வருவானவரித்துறையின் முக்கிய குறிப்பிட்ட அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் தெரிவிப்பேன். நான் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத்தான் இந்த காரியத்தை செய்தேன். இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை விரைவில் தெரிவிப்பேன். நான் தவறுசெய்து விட்டேன். அனைத்து உண்மைகளும் விரைவில் வெளியே வரும் ” என்று தெரிவித்தார். 

இந்த பேட்டியை பார்த்துக்கொண்டு இருந்த போலீசார், வருமானவரித்துறையினர் அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்குச் சென்று மகேஷ் ஷாவை கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!