
மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வை விரைவில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி 2017, ஜனவரி1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஏறக்குறைய ஒரு கோடிக்கும் மேலான பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு என்பது நாட்டில் ஏற்படும் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்த்தப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 125 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டதையடுத்து, அடிப்படை ஊதியத்தோடு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்தியஅரசு விரைவில் அறிவிக்க உள்ள இந்த 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தொழிற்சங்கங்கள் வரவேற்கவில்லை.
இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே. என். குட்டி கூறுகையில், “ மத்திய அரசு ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த உள்ளது. இது 2017, ஜனவரி 1 முன்தேதியிட்டு வழங்கப்படலாம். ஆனால், இந்த உயர்வு என்பது மிகவும் சொற்பமானது.
தொழிலாளர்களுக்கான நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்த அளவுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. இயல்பு நிலையைக் காட்டிலும் மோசமான புள்ளிவிவரங்களை தொழிலாளர்கள் வாரியமும், வேளாண் அமைச்சகமும் திரட்டி இதை உயர்த்தியுள்ளன. உண்மை நிலப்படி, அகவிலைப்படி என்பது, 2017 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-வரை 4.95 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜூலை முதல்தேதியை முன்தேதியிட்டு அகவிலைப்படியை 2சதவீதம் உயர்த்தியது. இப்போது 2 சதவீதம் உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.